திங்கள், ஆகஸ்ட் 01, 2016

பொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க பத்து டிப்ஸ் - ஐஞ்சுவை அவியல்.


ஏய் ராஜி! வா! வா! பார்த்து எத்தனை நாள் ஆச்சு?! எப்பிடி இருக்கே?!

நல்லா இருக்கேன்பா! கொஞ்ச நாளா மூஞ்சி புக்கை படிச்சுட்டு இருந்ததால இந்த பக்கம் வரல.  ஆனாலும், என் சுக,துக்கங்களில் பங்கெடுத்துக்கும்  என் உயிர் தோழி நீதானே!! அதான் உன்னை பார்க்க வந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன். 

சரி எப்படியோ! வந்ததுட்டே! இனி அடிக்கடி வரனும்..

எனக்கும் உன்னை விட்டா ஏது போக்கிடம்?! இனி கண்டிப்பா அடிக்கடி வருவேன்.

சரி, நாம வம்பு பேசி ரொம்ப நாளாச்சு ராஜி! புதுசா எதாவது சொல்லேன் .  

அப்துல் கலாம் ஐயா எவ்வளவு சாஃப்டான ஆளுன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்ல?! ஆனாலும் அவரும் ஒருத்தர்க்கிட்ட கோவப்பட்டிருக்கார். கோவப்பட்டதுமில்லாம இப்படி செஞ்சே ஆகனும்ன்னு தன்னோட வேலைக்காக மிரட்டியும் இருக்கார்.

இதென்ன புதுக்கதை?! கலாம் ஐயாவோட முதலாமாண்டு நினைவு நாள்ல எதையாவது உளறிட்டு வம்புல மாட்டிக்காத ராஜி!

எரும! எரும! நான் சொல்றது முழுக்க முழுக்க உண்மை... ஈரோடுல ஒரு நிகழ்ச்சில கலாம் ஐயாக்கு, மேடைல வெச்சு கிரைண்டர்     கம்பெனிக்காரங்க ஒரு கிரைண்டரை பரிசா கொடுத்திருக்காங்க. எதையும் கிஃப்டா வாங்குறதில்லைன்ற எப்பவுமே உறுதியா இருப்பார் கலாம் ஐயா. ஆனா, அந்த நேரத்துல அவருக்கொரு கிரைண்டரும் தேவைப்பட்டிருக்கு. அதனால, அந்த கிரைண்டருக்குண்டான விலையை வாங்கிக்கிட்டா தானும் அந்த கிரைண்டரை வாங்கிக்குறதா சொல்லி இருக்கார்.

கொஞ்சம் ஏமாற்றமடைஞ்சாலும் தங்கள் பொருள் கலாம் ஐயா வீட்டில் எந்தவிதத்திலியாவது இருந்தா சந்தோசம்தான்னு பைசா வாங்கிக்க சம்மதிச்சிருக்காங்க. கலாம் ஐயா கிரைண்டர் விலையான நாலாயிரத்து எண்ணூத்தி ஐம்பது ரூபாய்க்குண்டான செக்கை கொடுத்துட்டு டெல்லிக்கு போய்ட்டார். செக் வாங்குன கிரைண்டர் கம்பெனிக்காரங்க அதை, பேங்குல போடாம கலாம் ஐயாவோட நினைவா அந்த செக்கை பத்திரமா வச்சிக்கிட்டாங்களாம்.

இது ரெண்டு  மாசம் கழிச்சு கலாம் ஐயா கவனத்துக்கு வந்திருக்கு. உடனே, கிரைண்டர் கம்பெனிக்கு போன் பண்ணி, செக்கை பேங்க்ல போட்டு காசு எடுத்துக்கனும்... இல்லன்னா உங்க கிரைண்டர் உங்களுக்கு திருப்பி அனுப்பிடுவேன்னு மிரட்டி இருக்கார். கிரைண்டர் கம்பெனிக்காரங்க இதை எதிர்ப்பார்க்கல. உடனே, செக்கை பேங்க்ல போட்டு காசு எடுத்துக்கிட்டாங்க.

அப்படியா ராஜி!! எப்பேர்ப்பட்ட மனுசன்?! ஒரு கவுன்சிலர் கூட எத்தனையோ லட்சங்களை சுருட்டுறான். வாம்மா ராஜி! எப்படிம்மா இருக்கே?! ரொம்ப நாளாச்சே இந்த பக்கம் வந்து...  தோழிகள் ரெண்டு பேரும் அரட்டையடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?! 

நல்லா இருக்கேன்ண்ணே!  நீங்க எப்பிடிண்ணே இருக்கீங்க?! உன் ஃப்ரெண்டை கட்டிக்கிட்ட நான் எப்பிடி நல்லா இருப்பேன்?! எப்ப பாரு சண்டை போட்டுக்கிட்டு இருக்கா. நீதான் புத்தி சொல்லிட்டு போகனும். 

அதெல்லாம் பெரிய விசயமில்லண்ணே! மொத்தமே பத்து விசயங்களை நீங்க கடைப்பிடிச்சா அவ ஏன் சண்டை போடுறா?!

என்னம்மா அந்த பத்து விசயம்?!

1. பொண்டாட்டி செய்யுற சின்ன சின்ன தப்புகளை சொல்லி திட்டாதீங்க. நிதானமா பக்குவமா எடுத்து சொல்லுங்க.
2.  பொண்டாட்டியை பார்க்கும்போது உர்ர்ருன்னு இல்லாம லேசா சிரிச்சு வைங்க. நீங்க சிரிக்குறதை பார்த்து அவளும் தன்னோட கோவத்தை மறந்திடுவா. 
3. முக்கியமான வேலைல இருக்கும்ப்ஓது தொணதொணன்னு பேசாம வேலை முடிஞ்சதுக்கு பின்னாடி அது பத்தி பேசுங்க.
4. வேலைக்கு போற பொண்ணா இருந்தா அங்க என்ன நடந்துச்சுன்னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க. நீங்களும் உங்க வேலை இடத்துல நடந்ததை பத்தி சொல்லுங்க.
5. பொண்டாட்டி செய்யுற சின்ன சின்ன விசயத்துக்கு கூட நன்றி சொல்லுங்க. அதே மாதிரி தப்பு செஞ்சீங்கன்னா, உடனே மன்னிப்பு கேளுங்க. தப்பில்ல.
6. பொண்டாட்டி செஞ்ச தப்புக்களை சொல்லி காட்டிக்கிட்டே இருக்காதீங்க. அதேமாதிரி அவங்க பொறந்த வீட்டை பத்தி விளையாட்டுக்கூட குத்தம் சொல்லாதீங்க.
7. பொண்டாட்டியை அடிக்கடி இல்லன்னாலும் எப்பவாச்சும் கூட்டி போங்க. 
8.எதை பத்தியாவது பேசும்போது பிடிவாதமா இல்லாம பொண்டாட்டி சொல்லுறதை காது கொடுத்து கேளுங்க. 
9. பொண்டாட்டி எதாவது கேட்டா முடிஞ்சா உடனே வாங்கி கொடுங்க. இல்லன்னா உண்மையான காரணம் சொல்லி இதமா மறுப்பு சொல்லுங்க.
10. மத்தவங்க எதிர்க்க குறை சொல்லாதீங்க. தனியா அழைச்சுட்டு போயி எடுத்து சொல்லுங்க.

அம்மா தாயி! இம்புட்டு செய்யனுமா?! பொண்டாட்டியை வழிக்கு கொண்டு வர!!??

ஆமாண்ணே! அட்வைஸ்  செஞ்சு போரடிச்சுட்டேனோ?! சரி, உங்க ரிலாக்சுக்கு வாட்ஸ் அப்புல வந்த ஒரு படம் காட்டுறென் பாருங்க.

ஏய் எரும! அண்ணனுக்கு ஒரு படம் காட்டுன மாதிரி உனக்கு ஒரு விடுகதை கேக்குறேன் சொல்லு...

சில இடங்களில் சுவற்றில் இருக்கும்
இதை, 
உரக்க வாசித்தாலே உடைஞ்சி போயிடும்.  
அது என்ன?!

ஏய் ராஜி?! எங்களுக்குலாம் ஒரு வேலை கொடுத்தியே! இப்ப உனக்கொரு வேலை நான் கொடுக்குறேன். நீ சொல்லு பார்க்கலாம்!!


நூறு பூஜ்ஜியங்களைகொண்ட எண்களை என்னன்னு சொல்லுவாங்க?!

இது தெரியாதா?! ஆனா, இரு என் சகோ’ஸ் யாராவது சொல்றாங்களான்னு பார்க்கலாம்!!

புதன், ஏப்ரல் 06, 2016

ஃ பிரான்சுவா மார்டின் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி - மௌன சாட்சிகள்

பாண்டிச்சேரி  புரோமெனேட் பீச் பத்திய  பதிவுக்காக தகவல்களை திரட்டும்போதுதான் பாண்டிச்சேரி உருவான வரலாற்றை படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். அதை உங்கக்கிட்ட பகிரவே இன்றைய பதிவு...,  பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி பற்றி சில வரலாற்று தகவல்களையும், அது கடந்து வந்த பாதைகளையும், பாண்டிச்சேரியை உருவாக்கிய ருஃ பிரான்சுவா மார்டின் பற்றியும் இன்றைய மௌன சாட்சிகளில்பார்க்கலாம்.
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி  (French: Compagnie française pour le commerce des Indes orientales). பிரிட்டிஷ் மற்றும் டச்சு கிழக்கு இந்திய நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்காக 1664 ஆம் ஆண்டு வாணிப நோக்கோடு பாரிஸ் நகரை தலைமை இடமாக கொண்டு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது Jean-Baptiste Colbert என்பவரின் ஆலோசனைப்படி பதினான்காம் லூயி மன்னரால் பூமியின் கிழக்கு பகுதியில்  Compagnie de Chine,the Compagnie d'Orient and Compagnie de Madagascar  என்ற மூன்று கம்பனிகளை ஒருங்கிணைத்து நடத்த 1660 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
இங்கே பதினான்காம் லூயி மன்னரை பற்றி சொல்லவேண்டும் என்றால் இவர் கடவுளால் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டவர் என்று சொல்லபடுவதுண்டு.  இவர் தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சிலமாதங்களுக்கு முன்னேதான் பிரான்ஸ் மன்னராக பதவி ஏற்று கொண்டார். ஆனால் அவர் ஆட்சிப்பொறுப்பு எதிலும் தலையிடவில்லை அரசு நிர்வாகத்தை அவரது விசுவாசமான இத்தாலிய பிரதம மந்திரி ஜூல்ஸ் கார்டினல் மசரின் என்பவர் 1661ல் அவர் இறக்கும் வரை அவரே ஆட்சிபொறுப்பை கவனித்து கொண்டார். அதன்பிறகு தான் லூயிஸ் மன்னர் 1715 ல்   தன்னுடைய 77 ம் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார். இவரது ஆட்சிகாலம் எழுபத்தி இரண்டு ஆண்டுகள், மூன்று மாதங்கள் மற்றும் பதினெட்டு நாட்கள். இதுவரை எந்த ஐரோப்பிய மன்னர்களும் பதினான்காம் லூயிஸ் மன்னரைபோல் நீண்டநாள் ஆட்சி செய்ததில்லை. பதிவு பாண்டிச்சேரியிலிருந்து, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி போய் அப்படியே பிரெஞ்ச் அரசாட்சிக்கு போனால் அந்த வரலாறு மிகவும் நீண்டதாக இருக்கும். ஆகையால், அதை இத்தோடு நிறுத்திவிட்டு நாம் பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் பக்கம் வருவோம். 
அந்த சமயத்தில் நடந்த சமகால நிகழ்வுகளும், யுத்தங்களும் வரலாற்றில் மிகமுக்கியமான பங்கு வகித்தன. கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் சிறப்பாக வணிகம் செய்துவந்த போர்த்துகீசியர், டச்சுக்காரர், டேனியர் ஆகியோர் ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் வருகையால் வாணிப போட்டியில் வலுவிழந்து இந்தியாவில் இருந்து சிறிது சிறிதாக வெளியேறிவிட்டனர். கி.பி.1664-இல் தோற்றுவிக்கப்பட்ட பிரெஞ்சுக் கிழக்கிந்திய வணிகக்குழு கி.பி.1668-இல் சூரத்திலும், 1669-இல் மசூலிப்பட்டணத்திலும் பண்டகசாலைகளை  நிறுவியது. அக்காலகட்டத்தில் பீஜப்பூர் சுல்தானின் கீழ், சிற்றரசனாக இருந்த செர்க்கான்லோடி திருச்சிக்கு அருகிலுள்ள வாலிகண்டபுரத்தை  தலைமையிடமாகக்  கொண்டு ஆட்சி புரிந்தார். அந்த காலக்கட்டத்தில்தான் ஃபிரான்சுவா மார்டின் பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியின் பாண்டிச்சேரி பண்டக சாலையின்  இயக்குனராக பதவியேற்றார்.
பல்வேறு வரலாற்று போராட்டங்களுடன் ஆட்சிமாற்றம் மற்றும் நிர்வாக மாற்றம் போன்றவைகளால் அலைகழிக்கப்பட்ட  பாண்டிச்சேரி இறுதியில் ஒரு நகரமாக,] ருஃ பிரான்சுவா மார்டினால்  உருவாக்கப்பட்டது. அந்த காலத்தில் டச்சுகாரர்கள் வடிமைத்த பாண்டிச்சேரியில் தெருக்கள் நேராகவும், நேர்த்தியாகவும், ஒரு ஒழுங்கான அமைப்பில் வடிவமைத்திருந்தனர். சுதந்திர காலத்துக்கு முன்புவரை தெருக்கள் எல்லாம் நேராக இருந்ததாகவும் சொல்லபடுகிறது. பண்டையகாலங்களில் பாண்டிச்சேரியை பற்றி குறிப்பிடும்போது வீதி அழகு உண்டு, நீதி அழகு உண்டு என்று பழமொழியாகவே குறிப்பிடுவார்கள். இந்த வரைபடம் செப்டம்பர் 1893 முதல் 1693 முதல் மார்ச் 1699 வரை பாண்டிச்சேரியை  நிர்வகித்து வந்த டச்சுகாரர்களின் நகர வரைப்படம்.
ஆனால்,  சில இந்திய  வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது இந்த நகரம் பிரெஞ்ச் கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டபட்டுள்ளது. இருந்தாலும், சில அறிஞர்கள் டச்சுகாரர்களால் உருவாக்கப்பட்ட இந்த முறையானது  பிரான்சுவா மார்டின் காலத்திற்கு பிறகு மாறி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.       .

தெருக்கள்.எல்லாம் நேராக இருப்பதற்கு டச்சுசுகாரர்கள் வடிவமைத்த நகர "ப்ளு பிரிண்ட்" வரைப்படமே சாட்சி  என ஜேன் டிலோச்சி என்ற வரலாற்று ஆசிரியர் Ecole Francaise d”Extreme Orient at Pondicherry.  என்ற குறிப்புகளில் கூறியுள்ளார் .
கி பி 16 ம் நூற்றாண்டுகளில் பாண்டிச்சேரி நெசவு தொழிலில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது. அதேச்சமயம் துறைமுகமும் கூட அவர்களது வாணிபத்திற்கும்,  அந்நிய தேசத்து ஏற்றுமதி, இறக்குமதி முகாந்திரமாகவும் இருந்தது.
வாணிபம் சிறந்து விளங்கியதால், பல்வேறு கொள்ளைகூட்டங்களும் அவ்வப்போது மக்களை துன்புறுத்தி வந்துள்ளனர். அந்த காலகட்டத்தில் உள்ள ஆங்கிலேயர்களின் ஆவணங்களில்,1648 ல் பிண்டரியர் என்ற கொள்ளை கூட்டத்தினர், செஞ்சிகோட்டையிலும், பாண்டிச்சேரி துறைமுகத்திலும் கொள்ளையாடிததாக குறிப்பிட்டுள்ளனர். இதெல்லாம் ரூஃ பிரான்சுவா மார்டின் இந்தியாவிற்கு வருகை புரிவதற்கு முன்னமே நடந்து முடிந்திருந்தது. இதிலிருந்து நமக்கு பாண்டிச்சேரி பிரெஞ்சுகாரர்களால்தான் சிறப்பு பெற்றது என்றில்லாமல் அதற்கு முன்னமே செல்வசெழிப்பும், வரலாற்று நிகழ்வுகளிலும்  தொன்மையான நகரம் என தெரியவருகிறது.
அப்படிப்பட்ட பெருமைவாய்ந்த பாண்டிச்சேரி உருவாக காரணமாக இருந்தவர் தான்  ரூஃ பிரான்சுவா மார்டின். இவர்  ஜைல்ஸ் மார்டின்னுக்கும் பெரோன் கொசலின் என்பருக்கும் மகனாக 1634 ம் ஆண்டு பிரான்சில்  பிறந்தார். அந்த சமயத்தில் ஜைல்ஸ் மார்டின் பாரிஸில் வியாபாரம் செய்துவந்தார். 1660 ஆண்டு  அவர் இறந்ததும், ரூஃ பிரான்சுவா மார்டின், வேறு ஒரு வணிகரிடம் வேலைக்கு சேர்ந்து அங்கு ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில், துணை வணிக அலுவலராக பதவியேற்று கொண்டார். பிறகு பிரான்ஸின் வடமேற்கு பக்கத்தில் பிரஸ்ட் என்ற இடத்தில இருந்து மடகாஸ்கர் தீவு.  இது, ஆப்ரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் இருக்கிறது. அப்பொழுது அது பிரான்ஸ்  ஆதிக்கத்தில்  இருந்தது. அங்கே வணிப அதிகாரியாக 1665 ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பதவியேற்று கொண்டார் .
மடகாஸ்கரில் மூன்று ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த ரூஃ பிரான்சுவா மார்டின் அங்கே பதவி  உயர்வு பெற்று 1669 ம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கரையோரம்  உள்ள சூரத் நகருக்கு பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியின் வாணிபத்தை  பெறுக்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்.  சூரத்தில் சிறப்பாக பணிபுரிந்த ரூஃ பிரான்சுவா மார்டின் பின்னர் மசூலிப்பட்டிணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிறப்பாக பணியாற்றிய ரூஃ பிரான்சுவா மார்டின் பிரெஞ்ச் கிழக்கிந்திய பண்டகசாலையின் இயக்குனராகக்கபட்டார்.


Compare "The City of Masulipatam," from Philip Baldaeus, 'A true and exact description of the most celebrated East-India Coasts of Malabar and Coromandel," 1672

பழைய ஆவணங்களில்  இருந்து எடுக்கப்பட்ட  படத்தின் தெளிவான வடிவம்
1672 ம் ஆண்டு மசூலிபட்டிணத்தில் இந்த நாகரீக உலகில் கிரேன்களை கொண்டு சரக்குகளை கப்பலில் ஏற்றுவதை போல யானைகள் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளன .
பின்னர் ரூஃ பிரான்சுவா மார்டின் மசூலிப்பட்டிணத்திலிருந்து 1674 ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி 60 பிரெஞ்சுக்காரர்களுடன் பாண்டிச்சேரிக்கு வந்தார். அப்பொழுது   பேரன் என்பவர் பாண்டிச்சேரி பகுதியின் பொறுப்பு அதிகாரியாக இருந்தார். பின்னர், அவர் அங்கிருந்து சூரத்திற்கு தலைமை இயக்குனராக பொறுப்பேற்றதனால், ரூஃ பிரான்சுவா மார்டின் 1675 மே 5 ம் தேதி பாண்டிச்சேரி பண்டகசாலைக்கு இயக்குனராக பொறுபேற்றார்.
அதன்பிறகுதான் வரலாற்றில் சில முக்கியமான திருப்பங்கள் ஏற்பட்டன. இந்த காலகட்டத்தில்தான் செஞ்சி பகுதியில். மராட்டியருக்கும், மொஹலாயருக்கும் கடுமையான யுத்தங்கள் நடந்து கொண்டு இருந்தன. (அதைபற்றி நம்முடைய செஞ்சி கோட்டை பதிவுகளில் தெளிவாக குறிபிட்டுள்ளேன்). அதில்    எந்த பிரிவினருக்கும் ஆதரவு       கொடுக்காமல்
ரூஃ பிரான்சுவா மார்டின் நடுநிலைமையாகவே இருந்தார். அந்த சமயத்தில் கடுமையான போர்களின் காரணமாக மராட்டிய மன்னர் வீர சிவாஜியின் இளைய மைந்தர் இராஜாராம் கடும் நிதி பற்றாக்குறையில் இருந்தார் ஆகையால்  மராட்டியரின் கட்டுபாட்டில் இருந்த பாண்டிச்சேரியை பிரெஞ்சுகாரர்களிடம்  விற்பதற்கு முயன்றார். ஆனால், அவர் கேட்ட தொகையினை பிரஞ்சுகாரர்களால் கொடுக்க  முடியாததால் இந்த பேரம் தோல்வியில் முடிந்தது.
இதில் டச்சுக்காரர்களின் சூழ்ச்சியும் அடங்கும். அவர்கள் பாண்டிச்சேரி பிரெஞ்சுகாரர்களின் கைக்கு போகாமல் பார்த்துகொண்டனர். இதனால்தான் மன்னர் இராஜாராம் இரண்டாவது முறையும் பண்டிச்சேரியை விற்க வந்தபோது கூட ரூஃ பிரான்சுவா மார்டினால் அதைவாங்க முடியவில்லை. இறுதியாக  டச்சுக்காரர்கள் செஞ்சியில் சூழ்ச்சி செய்து மன்னர் இராஜாராமிடம் இருந்து பாண்டிச்சேரியை விலைக்கு வாங்கிவிட்டனர். ஆகையால் பிரெஞ்சுக்காரர்களை காலி செய்வதற்கு மராட்டிய நிலைகளுடன் சேர்ந்து டச்சுக்கார்கள் தாக்க தயாராகினர் .
அவர்களுக்கு உதவியாக படேவியம் என்று அப்பொழுது அழைக்கப்பட்ட இந்தோனேஷியாவிலிருந்தும், இலங்கைலிருந்தும், நாற்பது டச்சுகப்பல்கள் கொண்ட ஒரு படைப்பிரிவு 1693 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாண்டிச்சேரிக்கு வந்தது. அதிலிருந்து சுமார் 20,000 படைகள் கரையிறங்கி வந்து கடுமையாக போரிட்டனர். பிரெஞ்சுப்படையும் அவர்களுக்கு எதிராக ஆறு நாட்கள் போரிட்டது. இறுதியில் டச்சு கூட்டுப்படைகளின் முன்னர் தாக்கு பிடிக்க முடியாமல் சரணடைந்தது. இதுப்பற்றி ஒரு பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் தன்னுடைய குறிப்புகளில் இருபது ஆண்டுகள் பிரெஞ்சுக்காரர்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய பாண்டிச்சேரி நகரம் 1693 ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை ஒன்றுமில்லாமல்  தரைமட்டம் ஆக்கப்பட்டது என குறிபிட்டுள்ளார் .
ரூஃ பிரான்சுவா மார்டின்  மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சிறை பிடிக்கப்பட்டனர்.பின்னர அவரும் அவரது குடும்பத்தினரும் படேவியத்திற்கு (இந்தோனேஷியா) நாடு கடத்தப்பட்டனர். பின்னர் அவரை படேவியதிலிருந்து வங்கம் செல்ல அனுமதித்தனர். அதனால் அவர் 1694 ம் ஆண்டு பிப்ரவரி 15 ம் தேதி சந்திரநகருக்கு குடும்பத்துடன் வந்துசேர்ந்தார். அங்கிருந்து பாண்டிச்சேரியை அடைவதற்கு முயற்சி செய்தார். அதன்படி 1697ம் ஆண்டு செய்துக்கொண்ட ரைஸ்விக் ஒப்பந்தத்தின்படி பாண்டிச்சேரியை பிரெஞ்சுகாரர்களுக்கு திருப்பித்தர வழி வகை செய்யப்பட்டது. ஆனால்           டச்சுக்காரர்கள்  1699 ல் தான் பாண்டிச்சேரியை பிரெஞ்சுகாரர்களுக்கு விட்டுக்கொடுத்தனர் .   
இந்தியாவில் பல்வேறு ஐரோப்பிய அரசாட்சிகளின் ஆதிக்கம் இருந்ததால் 17ம் நூறாண்டு 18ம் நூறாண்டுகளில் ஐரோப்பிய வல்லரசுகளுக்குள் ஏற்பட்ட போர்கள் புரட்சிகளினால் அங்கே அரசுமாற்றங்கள் உருவானதுபோல் பாண்டிச்சேரியும், பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்தது. 1761 ல் பிரிட்டிஷ்காரர்களின் வசம் வந்த பாண்டிச்சேரி சுமார் 23 வருடம் அவர்களின் கட்டுபாட்டில் இருந்தது. டச்சுக்கார்களும், பிரிட்டிஷ்காரர்களும், மாற்றி மாற்றி பாண்டிச்சேரியை கைப்பற்றினாலும் பிரெஞ்சுக்காரர்களால் நடைமுறைபடுத்தப்பட்ட சட்டங்களை அவர்கள் மாற்றவில்லை என்பது ஒரு சிறப்பு என்று சொல்லலாம். அதன்பிறகு 1816ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின்படி, பிரஞ்சுகாரர்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டது. அப்பொழுது அவர்களின் ஒப்பந்தப்படி பாண்டிச்சேரி 293.7 சதுர கிலோமீட்டர். ஆனால், இப்பொழுது பரப்பளவு 492 கிமீ2 (190 சதுர மைல்) இந்த வரலாற்று சம்பவங்களிடையே பயணம் செய்தால் நாம் பிரெஞ்சு கதாநாயகன் ரூஃ பிரான்சுவா மார்டின் வரலாற்றில் இருந்து விலகி சென்றுவிடுவோம் .
1699ம் ஆண்டுக்கு பிறகு ரூஃ பிரான்சுவா மார்டின் பாண்டிச்சேரியில், வாணிபம் பாதுகாப்பு எல்லாம் வலுப்படுத்தினார். அவருடைய காலத்தில் பாண்டிச்சேரி மிக மிக்கியமான நகரங்களில் ஒன்றாக விளங்கியது. அதன் பிறகு 1700ம் ஆண்டுவாக்கில் வெள்ளியிலான அரைப்பணம், முழுப்பணம் இரட்டை பணம் போன்ற நாணயங்களை வெளியிட்டார். 1706ம் ஆண்டில் மட்டும் பாண்டிச்சேரியில் 10,000 பொன் வராகன்கள் அச்சிடப்பட்டதாக தகவல்கள் சொல்லுகின்றன.  ரூஃ பிரான்சுவா மார்டினின்  சேவையை பாராட்டி பிரெஞ்சு அரசு பல  விருதுகளை அவருக்கு வழங்கியது.
சூரத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கு வாணிபத்தில் போட்டி அதிகமானதாலும் லாபம் அதிகமில்லதாததுனாலும், அவர்கள் தங்கள் ஒட்டுமொத்த வாணிப ஸ்தலமாக  பாண்டிச்சேரியை தேர்ந்தெடுத்தனர். அதற்கு முன்னரே பிரெஞ்சு கிழக்கிந்திய  கம்பனி மேல்மட்ட அதிகாரிகளின் குழு சூரத்தை ஒட்டுமொத்தமாக காலி செய்துவிட்டு பாண்டிச்சேரியை தலைமை இடமாக கொண்டு இயங்க தீர்மானித்திருந்தது. அந்த கமிட்டியில் ஃரூ பிரான்சுவா மார்டின் புது தலமையாளராகவும், இந்தோ -பிரஞ்ச் கமிட்டியின் தலைமை இயக்குனாரகவும்  பிரஞ்சு அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்டார். 
1701 ம் ஆண்டுகளில் பாண்டிச்சேரி ரூஃ பிரான்சுவா மார்டின் காலத்தில் மிகசிறப்பாக விளங்கியது. அந்த சமயத்தில்தான் அவர் கோழிக்கோட்டில் (அப்பொழுது கள்ளிக்கோட்டை என அது அழைக்கப்பட்டது ). ஒரு பண்டகசாலையை நிறுவினார். 1706ம் ஆண்டு ஆற்காடு நவாப்பாக இருந்த தாவுதுகானிடம் இருந்து, ஒழுகரை, மருகாப்பாக்கம் (இதில் பாக்கம் என்றால் வியாபார ஸ்தலம் என்றும் சொல்லப்படுவதுண்டு). ஒலந்தை, மாக்கமுடையான் பேட்டை, கருவடிக்குப்பம் போன்ற இடங்களை  வாங்கி பாண்டிச்சேரியோடு இணைத்தார். அதேப்போல ஐரோப்பியாவின் பிரசித்தி பெற்ற  வாபன் துனாய் கோட்டையின் மாதிரி வடிவத்தை அடிப்படையாக கொண்டு ரூஃ பிரான்சுவா மார்டின் பாண்டிச்சேரியில் புனித லூயி கோட்டையை கட்டினார். அதன் திறப்புவிழா 1706 ஆகஸ்ட் 25 ம் தேதி நடந்தது. ரூஃ பிரான்சுவா மார்டின் கலந்துக்கொண்ட கடைசி பொதுவிழா இதுவே ஆகும். அதன்பிறகு       பாண்டிச்சேரியின்      முதல்      பிரெஞ்சு ஆளுனரான
 ரூஃ பிரான்சுவா மார்டின்  1706 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி  தனது 72 ம் வயதில் அவர் உருவாக்கிய பாண்டிச்சேரியில் வைத்து மரணமடைந்தார் .
File:Magasins de la Compagnie des Indes à Pondichéry,பாண்டிச்சேரியில் கிழக்கிந்திய கம்பெனியின் கடைகள்.


அதன் பிறகு துலிவியர் தலைமை ஆளுனர் மார்டினுக்கு பிறகு 1706  முதல் 1720 வரையிலும் ஐந்து ஆளுநர்கள் பொறுபேற்று கொண்டனர். 


Pierre Dulivier, January 1707 – July 1708

Guillaume André d'Hébert, 1708–12

Pierre Dulivier, 1712–17

Guillaume André d'Hébert, 1717–18

Pierre André Prévost de La Prévostière, August 1718 – 11 October 1721


அவர்களில் எவரும் ரூஃ பிரான்சுவா மார்டினை போல் திறமையாக செயல்படவில்லை அதன் பிறகு, 


Pierre Christoph Le Noir (Acting), 1721–23

Joseph Beauvollier de Courchant, 1723–26

Pierre Christoph Le Noir, 1726–34

Pierre Benoît Dumas, 1734–41

Joseph François Dupleix, January 14, 1742 – October 15, 1754

Charles Godeheu, Le commissaire (Acting), October 15, 1754–54

Georges Duval de Leyrit, 1754–58


Thomas Arthur, comte de Lally, 1758 – January 16, 1761 இவரது காலம் தான் பிரெஞ்சு கடைசி ஆளுநர் அதன் பிறகு பாண்டிச்சேரி பிரிட்டிஷ்காரர்கள் வசம் சென்றுவிட்டது. அதன்பிறகு,  வரலாற்று பக்கங்கள் நிறைய திருத்தி அமைக்கப்பட்டன. அதையெல்லாம் எழுதுவது என்றால் நம்முடைய பக்கங்கள் போறாது. அதனால ரூஃ பிரான்சுவா மார்டினின் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி பயணத்தோடு இதை நிறைவு செய்கிறேன் .

நன்றி வணக்கம்!

வெள்ளி, ஏப்ரல் 01, 2016

எங்க ஊரு கோவில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

ஒரு தேசத்தை ஆள்கிற மன்னன் தன் மக்களின் தேவைகள், தன் படைபலம், வருமானம், செலவை தெரிந்து வைத்திருப்பதுப் போலவே அடுத்த தேசத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்த நாட்டு அரசன் தன் மீது படை எடுத்து பொருளையும், பெண்களையும் அபகரித்துப் போனால் என்ன செய்வது என முன்யோசனையோடு ஏற்பாடு செய்து எச்சரிக்கையுடன் இருப்பவனே உண்மையான அரசன்.  அடுத்த நாட்டில் இருக்கும் சிறப்புகளெல்லாம் தங்கள் நாட்டுக்கும் கொண்டு வரவேண்டும் என துடிப்புடனும் இருக்க வேண்டும். 

அதனாலதான் ஒருத்தரை ஒருத்தர் போட்டிப் போட்டிக்கொண்டு அரண்மனை, கோவில், சத்திரங்கள், குளம், ஏரின்னு மக்களுக்கு நல்லது செய்தார்கள். நெல்லோடு சேர்ந்து புல்லும் வளர்வதை போல ஆன்மீகம், கலைகளை வளர்த்தலோடு பொறாமையும் சேர்ந்து வளர்ந்ததால் சண்டையிட்டு தாங்கள் விருப்பப்பட்டு கட்டிய கோவில், அரண்மனை, ஏரிகள் பாழாவதற்கு அவர்களே காரணமாயினர்.


புண்ணியம் தேடிப் போற பயணத்துல இன்னிக்கு நாம பார்க்கப் போறது எங்க ஊரு கோவிலான அருள்மிகு சிவவிஷ்ணு ஆலயத்தை.  எல்லா ஊருலயும் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் ஆலயங்கள் இருந்தாலும், அவை தனித்தனியாதான் இருக்கும். ஆனா, ஒரு சில ஊர்களில்தான் ஒரே கோவிலில் ரெண்டு கடவுளுக்கும் தனித்தனி கருவறை, கொடிமரத்தோடு   சந்நிதி இருக்கும். அப்படிப்பட்ட சில ஊர்களில் எங்க ஊரும் ஒண்ணு!!

 

முன்னலாம் ஆரணி நகரம் அடர்ந்தக் காடாக இருந்துச்சு. இப்பகுதியில் உத்தராதி மடத்தின் குருவான ஸ்ரீசத்திய விஜய சுவாமிகள் ஜீவ பிருந்தாவனத்தை எதிர்பார்த்தபடி தனது யாத்திரையைத் தொடங்கினார். அவர் சென்ற வழியில், கமண்டலநாக நதிக்கரையில் ஐந்து தலை நாகமானது அவர் எதிரே தோன்றி அடையாளம் காட்டியது. அங்கே ஸ்ரீசத்திய விஜய சுவாமிகளின் சிஷ்யர்களால் பிருந்தாவனமும், மிகப்பெரிய அரண்மனையும் கட்டப்பட்டு "சத்திய விஜய நகரம்' என்ற ஊர் நிர்மாணிக்கப்பட்டது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் சத்திய விஜய நகரத்தை ஜாகீதார் என்ற மன்னன் ஆண்டு வந்தார். புரட்டாசி மாதத்தில் திருமலை திருவேங்கமுடையானை தரிசிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். ஒருமுறை கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஜாகீர்தார் திருமலையப்பனை சேவிக்க முடியாமல் போனதால் மிகுந்த மனக்கவலை அடைந்தார். அன்று இரவு அவருடைய கனவில் தோன்றிய திருவேங்கடமுடையான் ""நானே உம்மைக் காண வருகிறேன்'' என்று கூறி மறைந்தார்.


மறுநாள் காலையில் நேபாளத்திலிருந்து, வேறொரு ஊரில் பிரதிஷ்டை செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்ட சாளக்கிராம திருமேனிகொண்ட சிலா ரூபமான ஸ்ரீநிவாஸ மூர்த்தியும், பச்சைக் கல் சிலா ரூபமான பத்மாவதி தாயார் விக்ரகமும் சத்திய விஜய நகரத்தைக் கடந்து எடுத்துச் செல்லும்போது.. வண்டியோட்டி சிரமப் பரிகாரம் செய்துக் கொண்டு வண்டியை கிளப்ப முற்படும்போது வண்டி ஓரடி கூட நகராமல் நின்றது.


பலவாறு முயற்சி செய்தும் பயனில்லை. இங்கிருந்த சிலைகளை வேறு வண்டிக்கு மாற்ற முயற்சி செய்தபோது சிலைகளைத் தூக்க முடியாததைக் கண்டு திகைத்து நின்றனர். இதனைக் கேள்வியுற்ற மன்னர் ஜாகீர்தாருக்கு கனவில் எம்பெருமான் கூறியது நினைவில் வந்தது. எனவே அங்கு மிகப்பெரிய ஆலயம் எழுப்பி பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாஸ மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்.

இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பவித்ர உற்ஸவம், ஸ்ரீஸுக்த  ஹோமம், திருப்பாவாடை உற்ஸவம், சொர்க்க வாசல் திறப்பு ஆகியவை நடைபெறுகின்றது. ஒவ்வொரு புரட்டாசி 4 வது வாரம் இங்கு எல்லா வித பழங்கள், காய்கறிகள், சாத வகைகள் கொண்டு அன்னாபிஷேகம் செய்து, அவை பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுது.
சீனிவாசப் பெருமாள் கோவில் பக்கத்துலயே, அவரின் தீவிர பக்தனான அஞ்சனை மைந்தன் ஆஞ்சிநேயர் சுவாமிகளுக்கு தனி சன்னிதி இருக்கு.


ஹரிக்கும், சிவனுக்கும் பிறந்தப் பிள்ளையான ஐயப்பனுக்கும் தனிச் சன்னிதி. கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களால் இங்கு வெகு விமர்சையாகப் படிப் பூஜை நடத்தி அன்னதானமும் நடக்குது.


நாகக் கன்னிக்கும் கூட சிறு சன்னிதி.

கிராம தெய்வங்களுக்கும் இங்கு இடமுண்டு...,


ஆரண்யம் என்றால் காடுன்னு பொருள். அடர்ந்த காடுகளும், அழகிய சோலைகளும் நிறைந்த இடம்ன்றதாலதான் இந்த ஊருக்கு ஆரணின்னு பேர் வந்தது. அந்த இயற்கை வளம் பொங்கிய காட்டைத்தேடி முனிவர்களும், தவசிகளும் இங்கு வந்தனர்.
சோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னன், நடுநாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தான். ஆரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியைக் கண்டு, அங்கே சூழ்ந்திருந்த அமைதியை உள்வாங்கி மகிழ்ந்தான்.. ‘இந்த இடம் மிகவும் சாந்நித்தியமான இடம். இங்கே முனிவர்கள் பலர், கடும் தவம் செய்திருக்கிறார்கள். சிவகணங்கள் அரண் போல் இந்த இடத்தைக் காத்து, சிவனருளை நாம் பெறுவதற்கு பேருதவி செய்து வருகின்றன’ என்று அமைச்சர் பெருமக்களும் அந்தணர்களும் சொல்ல… மகிழ்ந்து போனான் மன்னன்.

சேர தேசம், சோழ நாடு, பாண்டிய தேசம் என்று சொல்வதுபோல, விழுப்புரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் முதலான பகுதிகளை நடுநாடு என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில், அந்தப் பக்கம் ஆரணியையும், வேலூரையும் பார்த்து வியந்த மன்னர்கள் உண்டு. 

இவ்வூரின் அழகையும், இவ்வூர் மக்களின் சாத்வீகக் குணத்தையும் கண்டு அகமகிழ்ந்த மன்னன் இங்கு சிவப்பெருமானுக்கு ஒரு சன்னிதி எழுப்பி வணங்கினான். 
அறுபத்தி மூன்று நாயன்மார்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க எழுப்பப் பட்ட சன்னிதி. சிவராத்திரி, கார்த்திக தீபம், பிரதோசம் போன்றவை இக்கோவிலில் சிறப்பாக் கொண்டாடப் படுது. ஒவ்வொரு பிரதோசத்துக்கும் இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாதது. 


ஆரணி சுற்றுவட்டாரத்தில் கமண்டல நாக நதி ஓடுது. முன்னலாம் இருகரையும் தொட்டு தண்ணி ஓடும். இப்ப மழையில்லாததால ஆற்றில் தண்ணி இல்ல. தண்ணியே இல்ல, அப்புறம் எதுக்கு ஆறுன்னு நம்மாளுங்க யோசிச்சு!! குப்பையைக் கொண்டுப் போய் கொட்டுறதும், ஆத்துல மணலெடுப்பதும் நடக்கும். அப்படி குப்பைகளை அகற்றவும், மணல் தோண்டும்போதும் சிலைகள் கிடைப்பது அடிக்கடி நடக்கும். அப்படி கிடைக்கும் கற்சிலைகளை இக்கோவிலில் வச்சிடுவாங்க. ஐம்பொன் சிலைகளை வேலூர் அரசு அருங்காட்சியகத்துக்குக் கொண்டுப் போய்டுவாங்க.
நவக்கிரக நாயகர்களுக்கு தனிச் சன்னிதி. இச்சன்னிதிக்கும், எனக்கும் ஒரு தொடர்புண்டு. 

நான் அப்புவை வயத்துல சும்க்கும்போது இந்த சிவ - விஷ்ணு ஆலயத்துல இருந்து 1 கிமீ தூரத்துலதான் வாடகை வீட்டில் தங்கி இருந்தோம். மூத்தது ரெண்டும் பொண்ணாய் பொறந்துடுச்சு. அடுத்தது பையனாய் பிறக்கட்டும்ன்னு வேண்டிக்கிட்டு, நவக்கிரகத்துக்கு விளக்கேத்தி வான்னு அப்பா சொன்னார். தினமும் சாயந்தரம் கோவிலுக்குப் போய் வருவேன். அதாவது புண்ணியத்துக்கு புண்ணியம். நடந்த மாதிரியுமாச்சு.

அப்பு எதாவதுக் கிறுக்குத்தனம் பண்ணால், உடனே, “உன்னை கோவில்லப் போய் நவக்கிரகத்தைச் சுத்தச் சொன்னால் நீ ஆஞ்சினேயரை சுத்தி வந்திருக்கே. அதான், உன்புள்ளை இப்படிப் பொறந்திருக்குன்னு” அப்பா, அம்மா, பசங்க கிண்டல் செய்வாங்க.எங்க ஊரு கோவிலை நல்லா சுத்திப் பார்த்து புண்ணியம் தேடிக்கிட்டீங்களா!?

அடுத்த வாரம்  திருவண்ணாமலை மாவட்டத்தில் கடல் மட்டத்துல இருந்து சுமார் 4500 கிமீ உயரத்தில் இருக்கும் பர்வத மலையை  தரிசிக்கலாம்.

நன்றி வணக்கம்! 

இது ஒரு மீள் பதிவு...,

புதன், மார்ச் 30, 2016

பாண்டிச்சேரி புரொமெனேட் பீச்- மௌனச்சட்சிகள்

எப்பப்பாரு தமிழ்நாட்டுலயே சுத்திக்கிட்டு இருக்கோமே ஒரு மாறுதலுக்கு வேற எங்கிட்டாவது போலாம்ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது....., குட்டீசுக்கு கடற்கரைக்கு போகனுமாம். பெரியவங்களுக்கு கோவிலுக்கு போகனுமாம். எனக்கு எதாவது வரலாற்று சம்பந்தமான இடத்துக்கு போகனும், ரெண்டும்கெட்டான் வயசுல இருக்கும் என் பிள்ளைகளுக்கு கலர்ஃபுல்லான இடத்துக்கு எதாவது போலாம்ன்னு ஆளுக்கொரு ஆசைகளை சொன்னாங்க. 

அப்போ, தெருவில் ரெண்டு குடிமகன்கள் சரக்கு பத்தி பேசிக்கிட்டு போனது கேட்டுச்சு.   .உடனே “பாண்டிச்சேரி”தான் எல்லார் ஆசையும் நிறைவேத்துற இடம்ன்னு சொல்லி ”பாண்டிச்சேரி”க்கு கிளம்பிட்டோம்.  சரி, நீங்களும் எங்க குடும்பத்துல ஒருத்தங்கதானே?! நீங்களும் வாங்களேன் ”பாண்டிச்சேரி”க்கு....  

ஹலோ! ஹலோ! வெயிட், வெயிட்....., உடனே, ராஜியக்கா பாண்டிச்சேரிக்கு கூப்பிடுதுன்னு கிளாஸ், ஊறுகாய்லாம் எடுத்துட்டு வரப்படாது. பாண்டிச்சேரில சரக்கு கடை போலவே ரொம்ப ஃபேமசான இடங்களும் பல இருக்கு. அதுல,  அழகிய கடற்கரை என அழைக்கப்படும் ”புரொமெனேட் பீச்” ஒண்ணு. நாம அங்கதான் போகப்போறோம். போலாமா?! ரை ரை ரை ரைட்ட்ட்ட்டு....,
பாண்டிச்சேரி” சரக்குக்கப்புறம்  நம்ம ஞாபகத்துக்கு வர்றது ”அரவிந்தர் ஆஸ்ரமம்”. சுதந்திர போராட்ட வீரரான  அரவிந்தர், பாண்டிச்சேரிக்கு அடைக்கலம் தேடி 1910ல் வந்தார். தியான சக்தியை அனைவரும் உணரும் வகையில் ஆஸ்ரமம்ஒன்றை தொடங்கினார். 1914ம் ஆண்டு அரவிந்தரை சந்தித்த பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த மிரா அல்பாசா அவரது போதனைகளால் கவரப்பட்டார். அங்கேயே தங்கி ஆன்மீக கருத்துக்களை பரப்பிய இவர்தான் ”ஸ்ரீஅன்னை” என்று அழைக்கப்படுகிறார். இங்கு அரவிந்தர், ஸ்ரீஅன்னை சமாதிகள் உள்ளன. நாம் அந்த சாமதிகளின் மேல் தலைவைத்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம். காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் ஆஸ்ரமம்   திறந்திருக்கும். முதலில அங்க போய் அரவிந்தரின் ஆசிகளை வாங்கிக்கிட்டும், இந்த கூட்டத்துக்கிட்ட இந்த நாள் முழுக்க நான் படப்போற பாட்டுக்கு,,, தியானம் செஞ்சு கொஞ்சம் எனர்ஜி சேர்த்துக்கிட்டு போலாம் வாங்க...........

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சத்தம் போடாம வாங்க ப்ளீஸ்..., உங்க மொபைல் போனையும் ஆஃப் பண்ணி வச்சிடுங்க. இல்லன்னா, மத்தவங்களுக்கு  டிஸ்டர்ஃபா இருக்கும்.
எல்லோரும் மொபைல ஆன் பண்ணிக்கோங்க. ஏன்னா, நாம இப்போ மரைன் வீதில இருக்கோம். அட, யாருப்பா அங்க, ராஜியோட சேர்ந்ததால நாங்க தெருவுக்கு வந்துட்டோம்ன்னு முணுமுணுக்குறது?!  அரவிந்தர் ஆசிரமம் சுத்தி பார்த்ததுல பசிக்குதுல!! சரி வாங்க இந்த ஹோட்டல்ல போய்  எங்க கூட வந்த ஒரு சிண்டு ,இங்கே ஒரு ஹோட்டல் இருக்கு இங்கேசாப்பிடலாம். அழகா, மஞ்சாக்கலர் பெயிண்ட் அடிச்சு சுத்தமா இருக்கு. ஆனா, ஆட்கள் யாரையும் காணோமே! ஒருவேளை சாப்பாடு நல்லா இருக்காதோ!?

எதுக்கும் இருங்க. நான் போய் விசாரிச்சுட்டு வரேன்.  எல்லோரும் போயி அடி வாங்கக்கூடாதுல்ல. அட, இது ஹோட்டல் இல்லியாம்பா.  ”பிரெஞ்ச் எம்பசி”யாம் எம்புட்டு  எளிமையா இருக்கு?!ல்ல என்னைப்போல!! அதுக்கும் என்னைப்போலவே விளம்பரம்லாம் பிடிக்காதுப்போல!!!

எங்கயோ இருக்கும் ”பிரெஞ்சு”க்கும், ”பாண்டிச்சேரி”க்கும் என்ன தொடர்புன்னா,  1699ல் இந்தியாவின் சூரத்திற்கு பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் துணை வணிக அலுவலராக பொறுபேற்று, பிறகு புதுச்சேரிக்கு இயக்குனராக வந்தவர் பிரான்சுவா மார்ட்டின்(Rue François Martin) என்ற பிரஞ்சுகாரர்.  அதுலாம் ஒரு பெரிய கதை. அதைலாம் அப்புறம் விரிவா பேசலாம். இப்போ ஊர் சுத்தும் நேரம். அதனால,  இவர்தான் பாண்டிச்சேரியை 1674ல் உருவாக்கியவர்ன்னு சொல்லி சுருக்கமா முடிச்சுக்குறேன். தான் உருவாக்கிய பாண்டிச்சேரியில் 1706 டிசம்பர் மாதம் 20 தேதி பாண்டிச்சேரியின் தலைமை ஆளுனராக பொறுபேற்றுக்கொண்டார். இந்த பிரெஞ்சு எம்பசியை பார்க்கும்போது, பாண்டிச்சேரியை உருவாக்கியர்களுக்கு ஒரு நன்றியை சொல்லிக்கலாமே!! ஏன்னா, நன்றி மறப்பது நன்றன்றுன்னு எங்க தாத்தா சொல்லி இருக்கார். அன்னிக்கு இவங்கலாம் “பாண்டிச்சேரி”யை உருவாக்கி தரலைன்னா இன்னிக்கு நமக்கு இவ்வளவு......, சரக்கு குறைஞ்ச விலைல கிடைக்குமா?! 
”பாண்டிச்சேரி” பத்தி சொல்லணும்ன்னா, இன்று ”தண்ணி”யாலயும், அலையாலும் தள்ளாடிக்கிட்டிருக்கும், பாண்டிச்சேரி கடற்கரை, முதலாம் நூற்றண்டிலேயே  ரோமானியர்கள் வியாபாரம் செய்ய பயன்படுத்திய துறைமுக நகராகும். அதை அவர்கள் ”பொடுகா” என்று குறிப்பிட்டு இருக்கின்றனர். நான்காம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்து பல்லவ பேரரசின் கட்டுப்பாட்டிலும், அதன்பிறகு தஞ்சையை தலைநகராகக் கொண்டு,  ஆண்ட சோழ மன்னகள் வசம் பத்தாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரையிலும், அதன்பிறகு பாண்டிய மன்னர்களின் வசம் 13ஆம் நூற்றாண்டில்   வந்தது. 14ஆம் நூற்றாண்டிலிருந்து 1638இல் பீஜப்பூர் சுல்தான் கைப்பற்றும்வரை விசயநகரப் பேரரசின் பகுதியாக இருந்தது. 1674இலிருந்து பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சியில் இருந்து வந்தது, இடையிடையே ஆங்கிலேயர்களிடமும், டச்சுக்காரர்களிடமும் குறுகிய காலத்திற்கு இருந்தது. 1962ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. இதுதான் ”பாண்டிச்சேரி” கடந்துவந்த வரலாற்று பாதை.
பாண்டிச்சேரியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த கடற்கரை ”மரைன் வீதி” வழியாக செல்லும் போது நாம பார்க்குறது ”போர் நினைவுச்சின்னம்”. பாண்டிச்சேரி சாலைகளில் நடக்கும் “குடிமகன்”கள்தான் கோணல்மாணலா நடக்குறாங்களே தவிர, பிரெஞ்சுக்காரர்களால் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் இருக்குன்றது என்பது ஒரு சிறப்பு .
புதுச்சேரி நகரின் 1741 ம் ஆண்டு உள்ள பழங்கால நகர அமைப்பு 

அதுப்போல நீலமன்ன இந்த கடற்கரை வடக்கே பழைய சாராய வடிஆலை முதல் தெற்கே டூப்ளே சிலை வரை 1.5 கி.மீ. தூரமுள்ள சாலையில் நடந்துகொண்டே இந்த பக்கம் கடல் அழகையும் ரசித்தவாறு நடந்து செல்லும் வகையில் நேராக அமைந்துள்ளது .  
பாண்டிச்சேரியின் தலைமை செயலகமும் இந்த கடற்கரையில்தான் அமைந்துள்ளது.  மேலும், இந்த சாலையில் கார்கில் நினைவுச்சின்னம், பழைய கலங்கரை விளக்கம், காந்திசிலை, போர் நினைவுச்சின்னம், பழைய சுங்கச்சாவடி, டூப்ளே சிலை லாம் பார்த்துக்கிட்டே நடக்கலாம் வாங்க. யாராவது கொறிக்க எதாவது வாங்கிட்டு வாங்களேன் ப்ளீஸ்...
பிரெஞ்சு மொழியல் 'லா பாஃக்ஸ்-ப்ளேஜ்' என்ற பெயருக்கு 'பொய்யான கடற்கரை' என்று அர்த்தம். அரியான்குப்பம் பகுதியில் புதிய துறைமுகம் கட்டப்பட்ட பிறகு ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக ஒரு காலத்தில் அழகிய கடற்கரையாக இருந்த இந்த இடம் தற்பொழுது கற்பாளங்கள் கொண்டு செயற்கை சுவர்களாக அமைக்கப்பட்டது.  இதனால இந்த கடற்கரையில் நடந்து செல்லவோ, நீச்சலடிக்கவோ முடியாது. அப்படின்னா லவ்வுன்ற பேருல மூக்கையும், மூக்கையும் உரசிக்கவும் முடியாது. அதை ஓரப்பார்வைல பார்த்து ரசிக்கவும் முடியாதே :-(
நம்முடைய பழைய பதிவில் படிச்ச மதராசபட்டிணத்து சிவப்பு நிற கட்டிடம், போலவே இதுவும் இருக்கே!  பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களுடன் சம்பந்தப்பட்ட கட்டிடமோ இல்லை பிரெஞ்ச் இந்தியபாணி கட்டிடமோ அல்லது மியூசியமா?! என்ன ஏதுன்னு பார்த்துட்டு வரேன். அடடே! இது  ஹோட்டல்ப்பா! யாரோட பர்ஸ் நல்லா வெயிட்டா இருக்கு. உள்ள போலாமா?!
மயக்கும் மாலைபொழுதில் கடற்கரை மட்டுமின்றி அங்கே அமர்ந்திருக்கும் காதலர்கள்  கூட்டமும் கடல் அலைகளைப்போல் கரையில் உற்சாகமா இருக்காங்க. இதை பார்க்கும் பொழுது நம்முடைய சென்னை மெரினா பீச் அளவுக்கு சேட்டைகள் இல்லைன்னாலும் எதோ நம்ம கண்ணுக்கும் குளிர்ச்சியா இருக்கு. 
இந்தப்பக்கம் சிலர் குடும்பத்தினருடன் கூட்டமாக  அமர்ந்து, கற்களின் மேலிருந்து கடலையும், ஆர்பரிக்கும் அலைகளின் அழகையும் ,ரசித்தவாறே போட்டாக்கள் எடுத்து இயற்கை அழகை ரசித்தவாறே கடற்கரையில் காற்று வாங்கலாம்.வாங்க!!
கடற்கரையை ரசிக்கும் இவர்களை ரசித்தவாறே நாம கடற்கரையில் நடப்போம். பாண்டிச்சேரி பீச் மட்டுமில்லாம கருவடிக்குப்பத்தில் உள்ள சித்தானந்தா கோயிலும் பார்க்கவேண்டிய இடம். இந்த கோவிலில் அமர்ந்துதான் பாரதியார் பல பாடல்களை எழுதினார். அங்கு பாரதியாருக்கு சிலை வெச்சிருக்காங்க.  .மகாகவி பாரதியார் புதுவையில்  தங்கியிருந்த வீடு, மேலும் பல சித்தர்களும் புதுவையில் ஜீவ சமாதி அடைந்துள்ளனர்.  அதிலும் முக்கியமாக  குரு சித்தானந்தா, கம்பளிசாமி, அக்காசுவாமி மடம், கண்டமங்கலம் அருகே உள்ள படேசாகிப், ராம் பரதேசி சுவாமி மடம் போன்றவைலாம் நாம் இங்கே பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய இருக்கு. இதுக்கே நமக்கு பொழுது போகிட்டுது. மீண்டும் ஒருமுறை வாய்ப்பும், கடவுள் அருளும் இருந்தால் அவைகளையும் பார்க்கலாம்.
அங்கே கடலுக்குள் சில கம்பங்கள் நட்டுவைக்கபட்டு இருக்கே! அதுலாம் மீன்பிடிக்குறதுக்காகவா?! இல்ல படகுகளுக்கு எச்சரிக்கைக்காக வச்சிருக்காங்களன்னு  தெரியலையே! ஆனா, இந்தபக்கம் சில மீன்பிடி படகுகளும் சென்று கொண்டிருந்தன பாண்டியில் உள்ள நண்பர்கள் யாராவது இருந்தால் அது பற்றி தெரிவித்தால் நலம் .போய்க்கிட்டிருக்கு. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா!
கடற்கரையில் குப்பைகள்  கொட்டி மாசுபடுத்தாதீர்கள்ன்னு அறிவிப்பு மட்டுமில்லாம குப்பைக்கூடையை கூட அழகாக, பிள்ளைகளுக்கு பிடிச்ச உருவங்களில் உருவாக்கி இருக்காங்க. ஆனா, நம்ம ஆளுங்க அந்த குப்பைக்கூடையை சுத்திதான் குப்பைகளை கொட்டியிருக்காங்க. மேலும் கடற்கரையை ஒட்டியுள்ள பூங்காவில் குழந்தைகளுக்கு அடிபடாதவாறு கடல்மண்ணை பரப்பி வைத்துள்ளனர். வாங்களேன் கொஞ்ச நேரம் பூங்காவில் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரலாம்.
இந்த கலங்கரை விளக்கம் 173 ஆண்டுகால வரலாற்றை கொண்டது. பல போர்கள் பல ஆட்சிமாற்றங்கள், பல அழிவுகளை தாண்டி இன்றும் கம்பீரமா காட்சியளிக்குது. 1836 ல் பிரஞ்சுகாரர்களால் எண்ணெயினால் எரியும் விளக்குகளுடன் 24 கிமீ தொலைவு கடலுக்குள் தெரியும் வண்ணம் வடிமைக்கப்பட்டது இந்த கலங்கரை விளக்கம். பின்னர் 20 ம் நூற்றாண்டில் அது மின்விளக்குகளால் இயங்கும்படியாக அமைக்கப்பட்டது.
இதுதான் பழைய கலங்கரை விளக்கம் - புதுச்சேரி அரிய பழைய போடோக்களிலிருந்து !
கலங்கரை விளக்கம் இருக்கும் கட்டிடத்தில் கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்களை கொண்ட ஒரு ஸ்டால் இருக்கு. அதில் பழைய தஞ்சாவூர் ஓவிய பாணியில் இருக்கும் ஓவியங்களும், கைவினை சிலைகள் மற்றும் பல உபயோக பொருட்களும் விற்பனைக்கு வெச்சிருக்காங்க. வேணும்ங்குறவங்கலாம் வாங்கிக்கோங்கப்பா. 
கடற்கரையில் காந்திசிலை கம்பீரமாக காட்சிதருது. இங்கிருக்கும் தூண்களில் அழகிய சிற்பங்களும் செதுக்கப்பட்டிருக்கு. வாங்கப்பா எல்லோரும் நின்னு ஃபோட்டோ எடுத்துக்கலாம்.
பாண்டிச்சேரி கடற்கரையில் அடுத்து பார்க்க வேண்டிய முக்கியமான இடம் தூய இருதய கிறிஸ்து தேவாலயம். (சர்ச் ஆஃப் சேக்ரட் ஹார்ட் ஆஃப் ஜீசஸ்  இது 1908-ம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்டது என சொல்லப்படுது. இது இந்தோ -கோதிக் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்ட தேவாலயம். இங்கே என்ன சிறப்புன்னா இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை சித்திரங்கள் கண்ணாடி ஓவியமாக வரையப்பட்டுள்ளது. நமக்குதான் எம்மதமும் சம்மதமாச்சே!! வாங்க! உள்ள போய் ஏசுவுக்கு ஒரு வணக்கம் போட்டு வரலாம். 
இதுதான் சிறுவர் பூங்கா அமைந்துள்ள இடம். இங்கே சிறுவர்களுக்கென நிறைய விளையாட்டு சாதனங்களும் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறையவே இருக்கு. நாமளும் சின்ன பிள்ளையாய் மாறி விளையாடுவோம். எனக்கு சேப்பு கலர் பலூன் வாங்கி தாங்க சகோஸ்.
இதுதான் புதுவை பழைய துறைமுகத்தின் அரிதான படம். 

தூரத்த்த்த்த்துல தெரிவது துறைமுக பகுதி. கடற்கரையில் விதவிதமான உணவுவகைகள்.  பிரஞ்சு வகை காப்பி ஸ்டல்கள்,  பாஸ்ட் புட் போன்றவைகள மற்றும் கடற்கரையை சுற்றி உள்ள இடங்களில் தென்னிந்திய, வடஇந்திய, சைனீஸ், பிரெஞ்ச் என அனைத்து உணவு வகைகளும் கிடைக்கின்றன. சென்னையில் இருந்து 160 கி.மீ. தூரத்தில் இருப்பதால்  திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக இருமார்க்கங்களில் பேருந்து வசதியும், விழுப்புரம், சென்னை, திருப்பதி, புவனேஸ்வரம், யஷ்வத்பூர், மங்களூர், ஹவுரா போன்ற இடங்களில் இருந்து ரயில் வசதியும் இருக்கு. ஒருவழியா பழமையானதும், நூற்றாண்டை கடந்த,  பெருமை வாய்ந்த கடற்கரையை சுத்தினதுல கால்லாம் வலிக்குதுல்ல! அதனால, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு இந்த பாண்டிச்சேரி உருவாக காரணமாக இருந்த பிரான்சுவா மார்ட்டின்(Rue François Martin)வரலாற்றை நமது மௌனசாட்சிகள் பதிவில் அடுத்த வாரம் பார்க்கலாம்