வெள்ளி, ஆகஸ்ட் 18, 2017

ஆடி மாதம் உருவாக காரணமான பெண்ணின் கதை - ஆடி ஐந்தாம் வெள்ளி

அம்பாள் மாதமான ஆடிமாதம் முழுக்க பண்டிகை கொண்டாட்டங்களை தனித்தனியா பார்த்தோம். ஆடி முடிஞ்சு ஆவணி பொறந்தாச்சு. ஆடிமாத  முதல் வெள்ளி சொர்ணாம்பிகை, 2வது வெள்ளி அங்காளபரமேஸ்வரி, 3வது காளிகாம்பாள், 4வது வெள்ளி காமாட்சி அம்மன்ன்னு கும்பிடனும். ஒருவேளை இந்த ஆடி மாசத்துக்கு ஐந்து வெள்ளிக்கிழமை இருந்திருந்தா நாம வணங்க வேண்டிய தெய்வம்  வரலட்சுமியாகும். 

வரலட்சுமி அம்மனை பத்தி தெரிஞ்சுக்குறதுக்கு முந்தி ஆடிமாசம் உருவான கதையை பார்ப்போம்.

ஆடி என்ற தேவலோக மங்கை சிவன்மீது காதல் வயப்பட்டாள்.. பார்வதிதேவி சிவனை பிரிந்து தவம் செய்ய பூலோகத்தில் இருந்தபோது , பாம்பு உருக்கொண்டு யாரும் அறியாதபோது கயிலாத்திற்குள் ஆடி நுழைந்தாள்.  பின் பார்வதிதேவியாக மாறி சிவனை ஆசையோடு நெருங்கினாள். ஆடி சிவனை நெருங்க நெருங்க ஒருவித கசப்பு சுவையை நாவினில் உணர்ந்த சிவபெருமான் தன்னை நெருங்குவது தன் மனைவி பார்வதிதேவி அல்ல என்பதை புரிந்துகொண்டு கடுங்கோபத்துடன் தனது சூலாயுதத்தால் ஆடியை குத்தி கிழிக்க முயன்றார். 

சூலாயுதத்திலிருந்து வெளிவந்த தீப்பொறிகள் ஆடியை புனிதவளாக ஆக்கியது. ஆடியின் காமம் மறைந்து ஈசனை தொழுது, ஐயனே! ஒருநிமிடமாவது தங்களது அன்பான பார்வை என்மீது படவேண்டுமென இவ்வாறு நடந்துக்கொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டுமென வேண்டி நின்றாள். என்ன இருந்தாலும், நீ பார்வதிதேவி உருக்கொண்டு வந்தது தவறு, எனவே, நீ பூலோகத்தில் கசப்பு சுவையுடைய மரமாய் பிறப்பா என சபித்தார். இதற்கு விமோசனம் என்னவென்று ஆடி கேட்க, கவலைப்படாதே! பார்வதிதேவியின் உருக்கொண்டு வந்ததால் அவளுக்கு ஈடான மரியாதை உனக்கு கிடைக்கும். பார்வதிதேவியின் பரிபூர்ண அருள் உனக்கு கிடைக்கும். உன் நிழலில் தேவி இளைப்பாறுவாள். உன் பெயரிலேயே பூலோகத்தில் ஒரு மாதம் தோன்றும். அது அம்பாளுக்கு உகந்த மாதமாகும் என அருளினார். தேவலோக மங்கை ஆடிக்கு சிவன் அளித்த சாபமே அவளுக்கு வரமானது. ஆடி,  பூலோகத்தில் தெய்வாம்சம் பொருந்திய சக்தியின் வடிவமான வேம்பாய்  நின்றாள். நோய்கள் பலவற்றை நீக்கும் ஆற்றல் இந்த வேம்புக்குண்டு. தீய சக்திகளை அண்டவிடாது. செவ்வாய், வெள்ளியில் வேப்ப மரத்துக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு வணங்குவதால் மாங்கல்யபலம் கூடும். வேம்பினைப்போலவே துளசி வழிபாடும் ஆடிமாதத்தில் சிறந்தது. 

இனி வரலட்சுமி தேவியைப்பற்றி தெரிந்துக்கொள்வோம்..

தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலை கடைந்தபோது கடலில் இருந்து தோன்றியவர் லட்சுமி.  அவரை மகாவிஷ்ணு மணந்தார். பூலோகத்தில் தசாவதாரங்களை விஷ்ணு எடுத்தபோதும் அந்த சமயங்களில் லட்சுமியும் துளசி, பத்மாவதி, சீதா தேவி என்று பல வடிவங்களில் வந்து நித்ய சுமங்கலியாக விளங்கினார். தன்னை நினைத்து வழிபடுபவர்களுக்கு செல்வங்களை வாரி வாரி வழங்கும் குணம் படைத்த மகாலட்சுமி, பெண்களுக்கே உரிய தாயுள்ளமும் பொறுமையும் கொண்டவர். அப்படிப்பட்ட லட்சுமிதேவியை விரதம் இருந்து வழிபடுவதால், அஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்கும். . திருமணத் தடை விலகி மாங்கல்ய பாக்கியம் பெறலாம். கலை, செல்வம், வீரம், குழந்தைப்பேறு, தான்யம், வெற்றின்னு பதினாறு வகையான  செல்வத்தையும் ஒரு சேர அளிப்பவள் இந்த வரலட்சுமி. இவளைத்தான் இன்று பூஜிக்க வேண்டும். வரலட்சுமி நோன்பு பற்றி ஏற்கனவே பதிவு போட்டதால  மகாலட்சுமியை வீட்டில் வரவைக்க செய்ய வேண்டியதை பார்க்கலாம்.... 

அதிகாலை எழுந்து கைகால் கழுவி, பல் துலக்கி விபூதி, குங்குமமிட்டு கொல்லைப்புற கதவை திறந்தபின்னே தலைவாசலை திறக்கவேண்டும். இதுக்கு காரணம் மூதேவின்னு சொல்ற தூக்கத்துக்கு அதிபதியான மூத்ததேவி பின்வாசல் வழியாக செல்வாள் என்பதால்...  தெரு வாசலுக்கு நீர் தெளித்து மிச்ச மீதி தண்ணியை கொண்டுவந்து பின்வாசலுக்கு தெளிக்க வேண்டும்.. வாசல் பெருக்கி கோலம் இடவேண்டும். சாணம் தெளித்தால் நல்லது. சாணத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி லட்சுமியை வழிபட வேண்டும்.  வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர், பூக்கள், கண்ணாடி, துணிகள், வளையல் என அவரவர் வசதிக்கேற்ப கொடுக்க வேண்டும். இதனால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். வெள்ளி, செவ்வாய், விளக்கேற்றிய பின் உப்பு, தண்ணீர், பால், தயிர், பணத்தை கொடுக்க கூடாது.  தனக்கு சீராய் வந்த வெள்ளி பொருட்களை விற்க, பிறருக்கு கொடுக்ககூடாது.  வளையல், சீப்பு, கண்ணாடி, கண் மை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை தேங்காயுடன் முறத்தில் வைத்து தானம் அளிப்பவருக்கு, லட்சுமி தேவி விரும்பிய வரங்களை அளித்து அருள்புரிவார்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
Hindu Cosmos
நன்றியுடன்,
ராஜி.

வியாழன், ஆகஸ்ட் 17, 2017

பூத்து பூத்து குலுங்குதடி பூவு- கைவண்ணம்

எம்ப்ராய்டரி செய்யுறதால துணியில் ஒட்டினது போக மிச்சம் மீதி கற்கள் நிறைய இருக்கும்.  கொஞ்சமா இருக்குறதால முழுத்துணிக்கும் ஒட்ட முடியாது...  அதையெல்லாம் பேக் பண்ணி பரண்ல தூக்கி போட்டு வைப்பேன். ஸ்டாக்கிங் துணி, வுல்லன் நூல், சில்க் த்ரெட் நூல் இதுமட்டுமில்லாம பிளாஸ்டிக் கவர்லயும் பூக்கள் செஞ்சு ஓய்ஞ்சு போய் வலையில் மேயும்போது துணியில் ஒட்டும் கற்களைக்கொண்டு பூக்கள் செய்யுறதை பார்த்தேன்..உடனே செஞ்சு பார்த்தாச்சு...  

தேவையான பொருட்கள்:
கலர் கலரான திலகம் வடிவ குந்தன் கற்கள்
வட்ட வடிவ குந்தன் கற்கள்
கோல்ட் இல்ல சில்வர் கலர் அலுமினிய கம்பி
பச்சை டேப்
நூல்

எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கோங்க... 

எல்லாக் குந்தன் கற்களிலும் மேல, கீழன்னு ரெண்டு ஓட்டை இருக்கும் அதுல ரெண்டு ஓட்டைகளிலும் கம்பியை விட்டு எடுத்து முறுக்கிக்கிக்கோங்க.
இப்படியே எல்லா கற்களிலும் கம்பி கோர்த்து முறுக்கி வச்சுக்கோங்க.
வட்ட வடிவ குந்தன் கற்களை மையமா வச்சு திலக வடிவ குந்தன் கல் வச்சு பூ கட்டுற மாதிரி நல்லா இறுக்கமாக் கட்டிக்கோங்க.

இப்படியே ஒண்ணொன்னா ஆறு இல்ல எட்டு கற்கள் வச்சு இறுக்கமா கட்டிக்கிட்டே வந்தால் ஒரு பூ ரெடியாகிடும்.
 உங்களுக்கு பிடிச்ச மாதிரி வளைச்சு ரெடிப் பண்ணிக்கோங்க. 
இதை வச்சு க்ரீட்டிங் கார்ட் ரெடி பண்ணலாம். பொக்கே தயாரிக்கலாம். ஃப்ளவர் வாசும் செய்யலாம். புது கற்கள்தான் வாங்கனும்ன்னு அவசியமில்ல. பழசாகிப்போன பிள்ளைங்க ட்ரெஸ், நம்ம புடவைல இருக்கும் கற்களிலே கூட செய்யலாம்.பிடிச்சிருக்கா!?


வினாயகர் சதுர்த்தி வருதே! வினாயகருக்கு போட மாலை வேணும்ல்ல... அதனால.... 


தேவையான பொருட்கள்:
கோல்ட் கலர் சமிக்கி
பச்சை கலர் கண்ணாடி மணி,
மணி கோர்க்கும் நரம்பு,
கோல்ட் கலர் பிளாஸ்டிக் கோவில் மணி
கோல்டன் ரிப்பன்
வெள்ளை கண்ணாடிப் பூ
கோல்ட் கலர் பிளாஸ்டிக் குண்டு மணி

சமிக்கி எல்லா கலர்லயும் ஃபேன்ஸி கடைகள்ல கிடைக்குது. 100 கிராம் பத்து ரூபாய். உங்களுக்கு பிடிச்ச கலர்ல வாங்கி வந்து அதோட இதழ்களை உள்பக்கமா மடிச்சா கீழ் படத்துல இருக்குற ஷேப்புல வந்துடும். இது மாதிரி செஞ்சு வச்சுக்கோங்க.
உங்களுக்கு மாலை தேவைப்படும் அளவுக்கு பிளாஸ்டிக் நரம்பை கட் பண்ணி, அதுல பிளாஸ்டிக் கோவில் மணியை கோர்த்துக்கோங்க. இந்த கோவில் மணியும் எல்லா கலர்லயும் கிடைக்குது.
அடுத்து மணி கோர்த்த நரம்போட ரெண்டு நுனியையும் ஒண்ணா சேர்த்து ஒரு நரம்பாக்கி அதுல பிளாஸ்டிக் பூவோட இதழ்கள்லாம் மணியை பார்த்த மாதிரி கோர்த்துக்கோங்க. இந்த பிளாஸ்டிக் பூவும் எல்லா கலர்லயும் கிடைக்குது. இந்த பூ கிடைக்காட்டி சமிக்கி கூட யூஸ் பண்ணிக்கலாம்.
அடுத்து பிளாஸ்டிக் குண்டு மணி கோர்த்துக்கோங்க.
அதுக்கடுத்து கோல்ட் குண்டு மணியை கோர்த்துக்கோங்க.
அடுத்து வெள்ளை பிளாஸ்டிக் பூவை கோர்த்துக்கோங்க.
அதுக்கடுத்து 3 பச்சைக் கலர் மணியை கோர்த்துக்கோங்க. இதோட மாலையோட குஞ்சலம் ரெடி. 

அடுத்து, ஒண்ணா இருக்கும் ரெண்டு பிளாஸ்டிக் நரம்பையும் தனித்தனியா பிரிச்சு, ஒரு நரம்புல மடிச்சு வச்சிருக்கும் சமிக்கியோட இதழ்கள் மாலையோட மேல்பக்கம் பார்க்கும் மாதிரி கோர்த்துக்கோங்க.
அதுக்கடுத்து, பச்சை கண்ணாடி மணி 3 கோர்த்துக்கோங்க.
அடுத்து சமிக்கியோட இதழ்கள் மாலையோட கீழ்பக்கம் வர்ற மாதிரி கோர்த்துக்கோங்க. அதுக்கப்புறம் இன்னொரு சமிக்கியை திருப்பி எதிரும் புதிருமா வரும் மாதிரி, மேல் படத்துல இருக்குற மாதிரி கோர்த்துக்கோங்க.
இப்படியே 3  மணி, ரெண்டு சமிக்கின்னு மாத்தி ரெண்டு நரம்புலயும் கோர்த்துக்கிட்டு வாங்க.
ரெண்டு பக்கமும் ஒரே அளவுல கோர்த்தப் பின், கோல்ட் ரிப்பனை நரம்புல முடிச்சு போட்டுக்கோங்க.
அழகான கோல்ட் சமிக்கி மாலை ரெடி.
எங்க வீட்டு சாமி படத்துக்கு ஒரு மாலை.
எங்க வீட்டு பிள்ளையாருக்கு ஒரு மாலை. என் கையால நானே செஞ்சு போட்டதுல ஒரு சந்தோசம்!!

சமிக்கி பாக்கட் நாற்பது ரூபா, கண்ணாடி பூ, மணி, நரம்புலாம் சேர்த்து மொத்தம் 100 ரூபாய்ல பொருள்லாம் வாங்கி 2 அடி நீளத்துல ரெண்டு மாலை செஞ்சேன்.  ரெண்டு மாலை செய்ய அரை மணிநேரம்தான் பிடிச்சது. வெளில வாங்குனா ஒரு மாலை 100 ரூபாய் சொல்லுவாங்க. நாமளே செஞ்சா நமக்கு பிடிச்ச கலர்ல, பிடிச்ச டிசைன்ல செஞ்சுக்கலாம்தானே!?

இதுலாம் மீள்பதிவு...

இந்த வினாயகர் சதுர்த்திக்கு குடை, மாலைலாம் செய்யலாம்ன்னு ஐடியா... செஞ்சு பதிவாக்கனும்ன்னு வினாயர்கர்கிட்ட வேண்டிக்கோங்க. ஏன்னா நான் சோம்பேறி....


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1469653
Oksana Plus Hobbies: DIY: Zigzag Bracelet (Сделай сам: Браслет Зиг-заг)
நன்றியுடன்,
ராஜி.

புதன், ஆகஸ்ட் 16, 2017

மறைந்திருந்து தாக்குவது ஒரு தெய்வத்துக்கு அழகா?! - தெரிந்த கதை தெரியாத உண்மை

தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள வாலியும், தான் செய்தது சரியென ராமனும்  தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து சொன்னதை  போன பதிவில் பார்த்தோம்.  தன்னுடைய தரப்பு வாதங்களை வாலி எடுத்துரைக்க அவை எல்லாவற்றிக்கும் இராமன் எதிர்வாதம் செய்யாது  தன் தரப்பு நியாயத்தை மட்டுமே ஒரு அரசனுக்குரிய ரீதியில் எடுத்துரைத்தான். அதிலும் இராமர் ,வனவாசம் வரும்போது அயோத்தியை ஆண்டது அவரது தம்பி பரதன். இங்கே, நீதியை எடுத்துரைக்கும்போது தன்னை அரசனாக காட்டிக்கொள்ளாமல்,  எங்களது அரசன் பரதனது ஆணைப்படி என்றுதான் குறிப்பிடுகிறார்.  எல்லா வாதங்களும் ஓரளவு முடிவுக்கு வருகின்றன. சரி இனி என்ன நடக்கிறதென  பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்து பார்க்கலாம் சீக்கிரம் வாங்க ... முன்னாடி போய் உக்காந்துக்க இடம்புடிக்கலாம்....

முதலில் எதிர்ப்பை காட்டிய வாலி சிறிது நேரம் மெளனமாக இருந்தான். மெதுவாக தன்னை உணர்ந்தவனாய்  ஹேய் அயோத்தி ராஜகுமாரனே! ஆரிய இளவரசனே! நீ கூறிய வாதங்கள் எல்லாமே சரிதான். நான்தான் தவறு செய்துவிட்டேன். என்னுடைய நெறி தவறிய செயலுக்காக வருத்தபடுகிறேன். அறியாமையால் உங்களை பலவாறு நிந்தித்துவிட்டேன். என்னுடைய பிழைகளை பொறுத்தருள வேண்டுமென இராமனை நோக்கி இருகரம் கூப்பி தொழுதான். எந்த ஒரு குற்றமும் செய்தவர்கள் அந்த குற்றைத்தைஉணர்ந்து, அதற்காக வருந்தி இறைவனிடம் பிரார்த்தித்தால் அந்த கருணைக்கடல் நம்மை மன்னித்து அருள்வார். அது தேவரானாலும் சரி மனிதரானாலும் சரி.  அப்படிப்பட்ட பரம்பொருளின் ஆசிபெற்ற ராமனும் பிழை பொறுப்பது என்பது இயல்பானதே! இராமர் கருணையோடு வாலியை நோக்கி, வாலி நீ செய்த பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்து விட்டாய். தற்பொழுது எல்லா பாவங்களிலிருந்தும் நீ விடுப்பட்டு மோட்ச உலகம் செல்வாய் என வாலிக்கு உறுதியளித்தார். இராமரின் வார்த்தைகளாலும் அம்பினாலும் புனிதமடைந்த வாலி மோட்சத்தை அடைந்தான்.


இதுல நாம கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்னன்னா, ஒரு வழக்கில் எதிரெதிர் தரப்பினர் ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அங்கு வழக்கு என்பதே இல்லை. திருட்டுத்தனமாக அடுத்தவர் சொத்துக்கோ இல்லை பொருளுக்கோ அலையும் அரசியல்வாதிகள் அதை அடைய எத்தனை குறுக்குவழிகள் உண்டோ அத்தனையும் செய்யும்போது, நியாயத்தின்பக்கம் நின்று தன் தவறை அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.  காரணம் அவர்கள் நீதியின் பக்கம் என்றுமே நின்றது இல்லை. இப்பொழுது நீதி சொல்ல ராமனைப்போன்று யாரும் வரவும் இல்லை. அதுப்போல, இங்கே இராமர் தான் செய்ததில் உள்ள நியாங்களை, பொறுமையுடன் வாலியிடம் தெளிவுபடுத்தினார். வாலியும் அதை ஏற்றுக்கொண்டு இராமரிடம் சரணடைந்தான். குற்றம் உணர்வது என்பது  ஒரு நல்ல அரசனுக்கு அழகு. அதை வாலி உணர்ந்தான்.  பின்னாளில் வந்த திருவள்ளுவர்கூட தனது திருக்குறளின் இறைமாட்சி என்னும் அதிகாரத்தில்

"செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு"
என்று தெளிவாக கூறி இருக்கிறார்.  அதன்படி வாலியும், இராமர் தரப்பு நியாங்களை ஏற்றுக்கொண்டு .அவரிடம் சரணடைந்தான். வழக்கும் சுமூகமாக முடிவுற்றது. இதற்கு பிறகும் அப்பீல் வாங்குவதில் அர்த்தம் இல்லை.  ஒருவேளை தன்னுடைய திருட்டுத்தனங்களை ஒத்துக்கொள்ளாமல் இன்றைய அரசியவாதிகளைப்போல் வாலி இருந்திருந்தால் வாதம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும். வழக்கும்  முடிவுற்றிருக்காது. தன்னுடைய தம்பி சுக்ரீவனை மன்னனாகும்படி கட்டளையிட்டிருக்க மாட்டான். தனது கழுத்தில் இருக்கும் மணிமாலையை சுக்ரீவனுக்கு வழங்கி இருக்கமாட்டான். மேலும், தனது மகனான அங்கதனை  சுக்ரீவனுக்கு உறுதுணையாக செயல்பட்டிருக்கவிடவும்மாட்டான் .ஒரு குற்றம் என்றால் அதை நாம் தெரியாமல் செய்தால் பரவாயில்லை.  குற்றம் என்று தெளிவாக தெரிந்தால், அந்த இறைவனிடம் சரணாகதி அடைந்தால் பின்வருவன யாவுமே  இன்பகரமானதாகவே இருக்கும் .


இந்தளவு நியாய தர்மங்களைப் பற்றி புரியாதவர்கள் இராமனைப் பற்றி குறைகூறுவர். வாலிக்கு கருணைக் காட்டவும், கடக்கமுடியாத பிறப்பு, இறப்பு எனும் பெருங்கடலையும்,  பிறவா நிலையை அடையவும், அந்த பரம்பொருள் செய்யும் லீலைகளை, அவரால் உருவாக்கப்பட்ட இராமன்மூலம்  அந்த ஆதிபரம்பொருள் செய்யும் லீலைகள் இது. அதை தெய்வங்களே புரிந்துகொள்ளமுடியாதபோது சாதாரண மானிடர்கள் எப்படி புரிந்துகொள்வார்கள்?! அவர் ஒருவரை ஆசீர்வதித்து மற்றொருவரை வதம் செய்தாலும் இருவருமே உண்மையில் பலனடைகின்றனர். இதுவே பரம்பொருளின் கருணை. தாயினும் சிறந்த தயாபரன் அல்லவாஅவன்?!

இறைவனின் அருளால், உயிரை நீத்தல் என்பது மாபெரும் புண்ணியம். பகவான் கிருஷ்ணரின் முன்பாக உடலை நீத்த பீஷ்மரின்  அதிர்ஷ்டத்தை ஸ்ரீமத் பாகவதம் புகழ்கிறது. அதுப்போலவே, இராமரால் வதம் செய்யப்பட்டு, அவரிடம் மன்னிப்பை வேண்டிய பின்னர், இராமரைப் பார்த்தபடியே மரணமடைந்த வாலி, தனது அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலையடைந்தான். பகவானிடமிருந்து தான் பெற்ற பாக்கியத்தை ஒரு வானரத்தால்கூட உணர முடிந்தது. ஆனால் நவீன கால மக்களோ பூலோக நீதியையும் தர்க்கத்தையும் வைத்து இராமரைக் கேள்வி கேட்கின்றனர். 
  
Sita rama

மறைந்திருந்து வாலியை கொன்றது தவறு என வாதிடுபவர்கள்  சற்று சிந்திக்க வேண்டும். அவர் குற்றவாளி என்றால், ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்கள் அவரை வழிபட்டது ஏன்? பிரம்மாண்டமான கோவில்களை எழுப்பி அவரது புகழையும் போதனைகளையும் பரப்பியது ஏன்? அவர்கள் அனைவரும் மூடர்களா? நிச்சயமாக இல்லை. அவர்கள் இராமாயணத்தை முழு நம்பிக்கையுடன் படித்தனர், முறையாகக் கேட்டனர், ஒழுங்காகப் புரிந்துக்கொண்டனர்.   இராமரை இதயப்பூர்வமாக வழிபட்டனர். ஆனால் இன்றைய மக்களோ, மாமிசம், மது, மாது, சூது போன்ற எல்லாவித பாவச்செயல்களில் ஈடுபடுவது மட்டுமின்றி, சாஸ்திரங்களைப் படிப்பதில்லை.  எது சரி?! எது தவறு?! என தர்க்கம் செய்து தெளிவதில்லை, கோவிலுக்குச் செல்வதில்லை, எந்தவொரு புண்ணியத்தையும் செய்வதில்லை. ஆயினும், பகவான் இராமரிடத்தில் திறமையாக குறை காண்கின்றனர். என்ன ஒரு மூடத்தனம்!? மேலும், அவர்கள் நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் இழிவாகப் பேசுகின்றனர். நமது முன்னோர்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற கற்பனை கதைகளைக் கேட்டு நேரத்தை வீணடித்தார்கள் என்றும், அவர்களைக் காட்டிலும் தாங்கள் புத்திசாலிகள் என்றும் நினைக்கின்றனர். கற்றறிந்த பண்டிதர்களைக் காட்டிலும் உண்மையான அர்த்தங்களை” தாங்கள் கிரகிப்பதாகவும், தங்களின் தர்க்கங்கள் வேதகால ரிஷிகளைக் காட்டிலும் உயர்ந்ததென்றும் எண்ணுகின்றனர்.


இன்றைய நாத்திகர்கள், இராமாயணம், பகவத்கீதை, ஸ்ரீமத்பாகவதம் போன்ற எந்த சாஸ்திரங்களையும் படிப்பதில்லை. ஆனால் எல்லா வேதங்களையும் தொகுத்த  வியாசரைவிட அதிகம் அறிந்தவராக தம்மை எண்ணிக் கொள்கின்றனர். அதை படித்து அதில் என்ன உள்ளது என தெரிந்து கொள்ளும்போது, அவர்கள் தாமாகவே ஆஸ்திகர்களாகி விடுகின்றனர் வேறு சில தத்துவ ஞானியரோ, வாலி எதிரே நின்றால் எதிராளியின் பலத்தில் அரை மடங்கு அவனுக்கு வந்து சேரும் என்பதை சொல்லிக்க்காட்டுகிறார்கள்.  இறைவனுக்கு இதுலாம் ஒரு பொருட்டா?!


எது எப்படியோ! இந்த வாலி வதைத்த வாதம் மறைந்திருந்து தாக்கியது சரிதானா என்பதற்கும்,  இல்லை இது கற்பனை கதை என்று சொல்பவர்களுக்கும் தேவையான வாத  பிரதிவாத கருத்துக்கள் இலக்கியங்களில் கொட்டிக்கிடக்கின்றன. அது சரியே என்று நினைப்பவர்கள் தம்முள் எழும் தீய எண்ணங்களுக்கு நியாயத்தை கற்பிக்காமல் இறைவனின் துணைக்கொண்டு அதை அழித்துவிடுவார். இல்லை இது கற்பனை கதை என்று சொல்பவர்களுக்கு இங்கே விடை சொல்லப்படுகிறது .தீய எண்ணங்கள் நியாயப்படுத்தும்போது, அது முதலில் வாதமாக இருந்தாலும் முடிவில் உபாதையாக மாறும். ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியத்தையும் அறிவையும் கொண்ட நமது முன்னோர்கள் ஆராயாது எதையும் சொல்லவில்லை என்ற தீர்ப்புடன் இராமர் செய்தது சரியே என்ற உண்மையுடன் மீண்டும் ஒரு சுவாரசியமா தகவலுடன் உங்களை அடுத்தவாரம் சந்திக்கிறேன்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1469574நன்றியுடன்
ராஜி 

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017

ஆறு தலை முருகா! ஆறுதலை தர வா! - ஆடிக்கிருத்திகை


ஊரு உலகத்துல எத்தனையோ ஆயிரம் மொழி கிடக்கு. அதுல எந்த மொழிக்காவது கடவுள் இருக்கா?! ஆனா, நம் தாய்மொழியாம் தமிழுக்குன்னு தனி கடவுள் இருக்கார். தமிழைப்போலவே அழகும் இளமையும் கொண்டவர் முருகக்கடவுள்.இம்முருகனுக்கு கிருத்திகை நாளில் விரதமிருப்பது வழக்கம். மாதத்தில் ஒரு கிருத்திகை வரும். வெகு சில மாதத்தில் இருமுறையும் வரும். ஆனாலும், தை, ஆடி, கார்த்திகை கிருத்திகை மிக விசேசமாக கொண்டாடப்படுது. அதுக்கு என்ன காரணம்ன்னு பார்க்கும்முன் முருகனின் தோற்ற மகிமையை பார்ப்போம்...

தமிழ்க்குடி உருவான நாளிலிருந்து இயற்கை அழகு எல்லாத்துலயும் முருகனை கண்டனர்.  அதனால, தங்கள் இனக்கடவுளாக முருகனை வரித்துக்கொண்டனர். "முருகு"ன்ற சொல்லிற்கு அழகு, இளமைன்னு அர்த்தம். அதனால, முருகன்ன்னா அழகன்ன்னு அர்த்தமாகுது. மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் .

முருகன்ன்ற  பேருக்கு அழகு, இனிமை, இளமை, தெய்வத்தன்மை, மணம், மகிழ்ச்சி ஆகிய ஆறு தன்மைகளை தன்னகத்துள் கொண்டவன்னும் பொருள்படும். முருகன்ன்னா உயர்வானவன். அதனாலதான் குன்றிருக்கும் இடமெல்லாம் முருகனுக்கு கோவில் எழுப்பி கொண்டாடினர்.  முருகன் குறிஞ்சி  நிலத்து கடவுள்ன்றதால குறிஞ்சிக்கிழான்னும் பேருண்டு. இதுமட்டுமில்லாம, கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன்,  பக்தர்களின் இதயக்குகையில் வசிப்பதால் குகன், அசுரர்களை வெல்ல படை நடத்தி சென்றதால் சேனாதிபதி, வேலினை கொண்டிருப்பதால் வேலன், கங்கையால் தாங்கி வரப்பட்டதால் காங்கேயன், அப்பனுக்கு உபதேசித்ததால் சுவாமிநாதன், சரவணப்பொய்கையில் சேர்ந்ததால் சரவணன், ஆறு பிள்ளையாய் இருந்தவனை ஒன்று சேர்த்து ஒரு பிள்ளையாதலால் கந்தன், ஆறு முகங்களை கொண்டதால் ஆறுமுகன், விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன்.... இப்படி அவனின் பெயர்க்காரணத்தை சொல்லிக்கிட்டே போகலாம்.... 

கார்த்திகை விரதம் உண்டான வரலாற்றை பார்ப்போம்....சிவனிடம் வரங்கள் வாங்கி, அதனால் உண்டான மமதையால் தேவர்களை சிறைப்பிடித்து, மக்களை கொடுமைப்படுத்திய சூரனை வதைக்க வேண்டி ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை கங்கை தாங்கி, வாயுபகவானின் துணையோடு சரவணப்பொய்கையில் கொண்டு போய் சேர்த்தாள். 


ஆறு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் கொடுக்கப்பட்டது. கார்த்திகைப் பெண்களும் குமரனை பாலூட்டி போற்றி வளர்த்தார்கள். ஒருநாள் அம்மையும், அப்பனும் தங்கள் பிள்ளையை காண வந்தனர். ஓடோடி வந்த பிள்ளைகள் அறுவரையும் அன்னை சேர்த்தணைக்க ஆறுமுகமும், பன்னிரு கையும் உடைய குழந்தையாய் முருகன் மாறினான்.


கார்த்திகைப்பெண்களின் சேவையினை பாராட்டி அவர்களை நட்சத்திர பட்டியலில் சேர்ப்பித்தோடு, கார்த்திகை நட்சத்திர நாளில் விரதமிருந்து முருகனை வழிப்படுவோருக்கு முருகனின் அருளும், முக்தியும் பரிபூரணமாய் கிட்டுமென அன்னை அருளியதோடு அன்றிலிருந்து முருகன் கார்த்திகேயன் எனவும் அழைக்கப்படுவான் எனவும் சொன்னாள். இதுதான் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் என்று அழைக்கப்படுகிறது. 'ஆறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந்து அருளினானே' என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுமளவிற்கு  கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது.


கிழமைகளில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. திதிகளில் சஷ்டி திதி முக்கியமாகும்.  நட்சத்திரத்தில் 'கிருத்திகை' முருகனின் நட்சத்திரம்.  மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமானது. முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை கிருத்திகை.  மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.


முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரிய கண் இமைக்கும் நேரத்தில் காற்றை கிழித்து வருமாறு உருவம் கொண்டது. அழகிய மயில் அழகனுக்கு வாகனாமானது எத்தனை பொருத்தம்?! அழகோடு வேகமாய் பறக்கும் ஆற்றலும் கொண்டது. பக்தர்களின் துயரினை துடைக்க வரும் முருகனுக்கு மயில் வாகனமானது.  மயில் மனித மனத்தின் சின்னம். பரிசுத்தமான, அழகான உள்ளம்தான் இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. சிறு சத்தத்துக்கே அச்சமுறும் தாவர பட்சிணியான மயில் , மாமிசபட்சிணியான கொடிய விசம் கொண்ட பாம்பின்மீது மயில்  முருகன் எல்லா சக்திகளையும் அடக்கி ஆட்சி செய்வதோடு, முருகனால் முடியாதது எதுமில்லை என்பதையும்  காட்டுகிறது.


கிருத்திகை விரதமிருப்பவர் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டை தூய்மைப்படுத்தி காலை உணவெதும் உட்கொள்ளாமல் மதியம் உப்பில்லா உணவை முருகனுக்கு படைத்து அதை உண்டு, இரவு பால் பழத்தோடு விரதத்தை முடிக்க வேண்டும்.    காலமாற்றத்தில் உப்பில்லாமல் உணவு படைப்பது நின்று போயிற்று..


எல்லா முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகையன்று பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, திருவீதி உலா என விமரிசையாக பல விழாக்கள், உற்சவங்கள் நடைப்பெறும்.  பழனி,. திருச்செந்தூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷமென்றாலும் திருத்தணி முருகன் கோவில்தான் ஆடிக்கிருத்திகைக்கு மிக விசேசமானது. இந்நாளில், திருத்தணி முருகன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த உலகெங்கும் இருந்து பக்தர்கள் வருவர்.  இங்கிருக்கும் சரவணப்பொய்கையில் மூன்று நாட்கள் இரவு வேளையில் தெப்போற்சவம் நடக்கும். 


கந்தன் காவடிப் பிரியன் என்பதால், அவரவர் வேண்டுதலுக்கேற்ப பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, மயில் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்துவது வழக்கம். ஜோதிட சாஸ்திரத்தின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சமாதலால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ தடை, குரு, செவ்வாய் திசை நடப்பவர்கள் ஆடி கிருத்திகை நாளன்று முருகப் பெருமானை பக்தியுடன் மனமுருக பிரார்த்தித்தால் சகல தோஷ, தடைகளும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும், உள்ளமும் தூய்மையாகி மனம் அமைதியும் சந்தோஷமும் அடைகிறது.

வேலுண்டு வினையில்லை.....மயிலுண்டு பயமில்லை...

ஓம் முருகா துணை.... 
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 
வீரவேல் முருகனுக்கு அரோகரா! 
ஞானப்பண்டிதனுக்கு அரோகரா! 
பழனி முருகனுக்கு அரோகர!
பாலதண்டாயுதபாணிக்கு அரோகரா!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1469509

நன்றியுடன், 
ராஜி.