Friday, February 07, 2014

அருள்மிகு கரும்பழத்து கைலாசத்து மகாதேவர்- புண்ணியம்தேடி ஒரு பயணம்

புண்ணியம் தேடி ஒரு பயணத்துல இந்த வாரம் நாமப் பார்க்கப் போறது அருள்மிகு கரும்பழத்து கைலாசத்து மகாதேவர் ஆலயம். இந்த ஆலயம் வயல் பரப்பின் அருகே பசுமையாக அழகாகக் கட்சியளிகிறது. இந்த இடத்தின் பெயர் கருப்புகோட்டை என அழைக்கபடும், இந்த இடம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் ரயில்வே நிலையத்தின் பின்புறம் இருக்கிறது. ஆனா, இதற்கு செல்லும் வழி நாகர்கோயில் புதுகிராமம் வழியாகவும், சுசிந்தரம் தேரூர் வழியாகவும் செல்ல வழி இருக்கிறது. வாங்க கோவிலுக்குள் போகலாம்...,

இந்த இடத்திற்குp பெயர்தான் கருப்புகோட்டையே தவிர இங்க எந்த கோட்டையும் இல்லை. ஆனா இங்க ராணுவமுகாம் இருந்ததாகவும், அகழ்வாராய்ச்சியில் பழைய காலத்து வாள் கிடைத்ததாகவும் சொல்லபடுகிறது. ஆனா, இந்த இடத்தை சுற்றிலும் கரும்பு காடாகத்தான் இருந்ததாம்.


இப்பகுதிகளில் கரும்புதான் பெரும்பாலும் பயிர் செய்யபட்டதாம். இதற்கு சாட்சியாக கரும்பிலிருந்துச் சர்க்கரையைப் பிரிக்கும் செக்கு அழிந்த நிலையில் இன்றும் இந்தப் பகுதிகளில் இருக்கு. கோவிலுக்கு பிரதான நுழைவு வாசல் கிழக்கு வாசலாக இருந்தாலும் கூட,  தெற்குத் திசையைத் தவிர எல்லாத் திசையிலயும் நுழைவு வாசல் இருக்கு.  


கோவிலுக்கு வெளியே நாகச் சிலைகளும், அதன் அருகில் விநாயகர் விக்கிரகமும் இருக்கு. வாங்க! முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு கோவிலுக்குள் செல்லலாம்!!

இக்கோவிலில் கிழக்கு நோக்கிய ஆவுடையார் திருக்கோலம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. திருக்கோவிலின் முன்பு, நந்தி மண்டபம் தனியேக் காணப்படுகிறது.  இந்தத் திருக்கோவிலின் கட்டிட அமைப்பு சோழர் கால அமைப்பு கொண்டதாகவும், ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. தஞ்சை பெரியகோவிலின் மாதிரி வடிவம் கொண்டது இக்கோவில். இங்கு தாயார் சன்னதி முதலில் இல்லாமல் இருந்துப் பிற்காலத்தில் கட்டப்பட்டது. ஆவுடையார் பெயர் அருள்மிகு கரும்பழத்து கைலாசத்து மகாதேவர். தாயார் பெயர் சிவகாமி அம்பாள் . 
   
இந்த நந்திமண்டபத்தின் பின்புறம் நேரே இருப்பது மூலவர் சன்னதி. இது மிகவும் பழமையானக் கோவில் என்றும் இந்திரன் வரும்போது அவனுக்கு இங்கே இருக்கும் தஷ்சிணாமூர்த்தி வழிகாட்டியதாகவும் இக்கோவிலுக்கு வரலாறு உண்டு .

இந்தக் கோவிலின் தூண்களில் நிறைய வளையங்கள் காணப்படுகிறது. இதுஎல்லாம் இந்த கோவிலின் வயதைக் குறிக்கும் ஆண்டு வளையங்கள் எனச் சொல்லப்படுது. இக்கோவில் உருவான வருடத்தைப் பற்றியக் குறிப்புகள் எனவும் சொல்லப்படுகிறது. இதன் உத்திரத்தின் பகுதியில் நிறைய உருவங்களின் தலை பகுதிகள் செதுக்கப்பட்டிருக்கு. அவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்தபல்வேறு சித்தர்கள் அங்கே வழிபாடு செய்ததன் நினைவாக பொறிக்கபட்டுள்ளதாம்.

இந்தத் திருக்கோவிலின் சிறப்பு என்னனா, எல்லாக் கோவில்களிலும் நவக்கிரக சன்னதி கீழேதான் இருக்கும். ஆனா, இக்கோவிலில் மட்டும் உத்திரத்தில் இருக்கிறது.  இது ஒரு பரிகார அமைப்பு என சொல்லபடுகிறது. இதற்குத் துணையாக 8 சித்தர்களும் நர்த்தன நாயகிகளும் நவக்கிரகங்களுக்குத் துணையாக இருக்கின்றனர்.

ஒன்பதாவதாக சுப்பிரமணியர் நவகிரகங்களுக்கு நாயகராக இருக்கிறார். மேலும் சுப்பிரமணியர் சித்தர்களின் முதன்மையானவர் எனவும் சொல்லபடுவதால் இங்கு எட்டு ராசிகளுக்கு எட்டு சித்தர்களையும், ஒன்பதாவதாக சுப்ரமணியரே இருந்து பரிகாரம் செய்வதாகவும் இது விசேஷ அமைப்பு எனவும் சொல்லபடுகிறது. மேலும் சிறப்பு அம்சமாக இந்த உதிரத்தில் இருக்கும் அமைப்புடைய நவக்கிரக சன்னதிக்கு நேர் கீழே நின்று மூலவரை தரிசிக்கும் போது நவக்கிரகங்களின் பார்வையும், மூலவரின் பார்வையும், அம்பாளின் பார்வையும் ஒரே நேர்க்கோட்டில்  கிடைக்கும். இது வேறு எந்த கோவிகளிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சம்.

இரண்டுப் பிரகார அமைப்புக் கொண்டது இக்கோவில்.  உள்பக்கமும், வெளிபக்கமுமாக இதில் அந்தந்த தெய்வங்கள் இருக்கும் சன்னதிக்கு பின்புறம் இருக்கும் சுவரில் வேலைபாடுகள் மிக்க சில வரைபடங்கள் உள்ளன. அவற்றை பற்றியக் குறிப்புகள் தெரியவில்லை . சுவர்களிலெல்லாம் நிறைய சிற்ப வேலைபாடுகளுடன் அருமையாக காட்சியளிக்கிறது இந்த திருக்கோவில்.

அதேப்போல தட்சிணாமூர்த்திதியும் மதுரை போன்றப் பெரிய கோவில்களில் உள்ள அமைப்பு போல படியேறி சென்று கும்பிடும் அமைப்புடன் இருக்கிறது இது ஒரு விஷேச அமைப்பு என சொல்லபடுகிறது. 

அதுப்போல இங்க இருக்கிற தட்சிணாமூர்த்தி சன்னதியின் பக்கத்து சுவரில் மணிகள் கோர்த்தது போன்ற அமைப்பு காணபடுகிறது. இது இந்த கோவிலின் ஆண்டு கணக்கீடு என சொல்லபடுகிறது. பல்வேறு வகையான கணக்கீட்டு முறைகளும் இங்கே நடைமுறையில் இருந்ததாகவும் தெரிகிறது. இதற்கு இங்கே உள்ள கல்வெட்டுகள் சான்று என அங்கிருப்பவர்கள் சொன்னார்கள்.

வெளிப் பிரகாரத்தில் இருக்கும் விநாயகர் கன்னி விநாயகராகவும், உள் பிரகாரத்தில் பிரசன்ன விநாயகராகாவும் வீற்று இருந்து நமக்கு அருள் பாலிக்கிறார். 

கோவிலின் சுவர்களிலெல்லாம் நிறைய கல்வெட்டுகள் இருக்கு. கோவிலைப் பத்தின குறிப்புகள், முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த எழுத்து முறைகளும் இந்தக் கால நடைமுறைக்கேற்ப எளிமையாக நாமேப் படித்துத் தெரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் இருகின்றன .

மூலவர் விமானத்தில் மகா விஷ்ணுவின் சிலைவடிவம் காணப்படுகிறது. இங்க சைவ வழிபாடும், வைணவ வழிபாடும் சேர்ந்தே இருந்திருக்கின்றது.
மூலவர் கோபுரத்தில் வைணவ குறியீடுகளும் குறிக்கப்பட்டிருக்கு.


மேலும், இக்கோவில் கோபுரத்தில் பிரம்மாவும் வீற்று இருக்கிறார். பக்கவாட்டு சுவர்களில் இங்கே வழிப்பட்ட சித்தர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.  அதில் பாம்பு வடிவத்தில் சுருண்டு இருக்கும் சித்தரும், குரங்கு வடிவ சித்தரும் மிகவும் விசேஷமானவை.  தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தில் வரும் சிவப்பெருமானுடைய நட்சத்திரமான திருவாதிரையில் நேரடியாக சூரியபகவான் மூலவரை தன்னுடைய கதிர்களால் வழிபடுகின்றான். அதில் திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் இரண்டு நாட்களுக்கு பாதியாகவும் நட்சத்திரம் அன்று முழுவதுமாகவும் அதன் பின்னால் வரும் இரண்டு நாட்களுக்கு சூரிய கதிர் பாதியாகவும் மூலவர் மேல் விழுவது மிகவும் அதிசயம். 
மேலும் மாசி மாதம் வரும் ஆயில்ய நட்சத்திரதன்றும் தன்னுடைய கதிர்களால் மூலவரை வழிபாடு செய்கிறான் ஆதவன். இந்த ஆயில்ய நட்சத்திரம் நாகதோஷத்திற்கானப் பரிகார நட்சத்திரம் என்பதால் இங்க நாக தோஷப் பரிகாரமும், திருமணத்தடை, குழந்தை பேரு,  தேகரட்சை போன்ற பரிகாரங்களும் செவ்வனே செய்யபடுகின்றன. மேலும் மூலவர் திருமேனி மேல்,  மருந்துகள் கலந்த பாத்திரத்தில் இருந்து சொட்டுச் சொட்டாக வடநாட்டு கோவிகளில் இருப்பது போல் விழுகிறது.   பிரகாரத்தின் உள்புறம் பைரவர் சன்னதியும் இருக்கு.

இங்கே தெரிவது ருதிராட்சமரம். இதன் பக்கத்தில் இருக்கும் இந்த மேடை 1000 வருஷங்களுக்கு முன் இங்கே ஒரு சித்தர் திருவாதிரை நட்சத்திரம் அன்று ஜீவ சமாதியான பீடம்.  இது கோவில் நிர்வாகம் பண்ணுகிரவர்களுக்கே தெரியவில்லை. பிரசன்னம் பார்த்ததில் இந்த விஷயங்கள் தெரியவந்ததிருக்கு. நாமும் அந்த சித்தர் சமாதியில் நமச்சிவாய மந்திரத்தை சிறிதுநேரம் மனதில் தியானிப்போம். நன்மைகள் எல்லாரையும் வந்து சேரட்டும்.
  
இங்க இருக்கிற கல்வெட்டைப் போல் ஏழு கல்வெட்டுக்கள் கோவிலை சுற்றி காணப்படுகின்றது.  அதில் எந்தெந்த விழாக்கள் இங்க கொண்டாட படுகின்றன!? மேலும் எதற்காக நிலங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன!? விளக்கு எரிக்க எண்ணை வாங்க சில நிலங்களில் இருந்து வரும் வருமானத்தை எடுத்து கொள்ள சொல்லி இருக்கும் குறிப்பு.  அன்னதானம் செய்ய சில நிலங்களில் இருந்து வரும் வருமானங்களில் இருந்துவரும் நிலங்கள் பத்தின குறிப்புகள் இதில் குறிக்கபட்டுள்ளது.


மேலும் சமீபத்தில் மறைந்த திருவிதாங்கூரின் கடைசி மகராஜா கையில் ஒரு எந்திரம் வைத்து கொண்டு அவர்கள் ஆட்சியில் இருந்த முக்கியமான 41 கோவில்கள் பற்றிய குறிப்புகளோடு எல்லா தெய்வங்களின் ஆசிகளை பெறவேண்டி மூன்று வருடம் முன்பு யாத்திரை புறப்பட்டபோது எல்லா கோவில்களிலும் மூன்று நிமிடங்கள் மட்டும்தான் இருந்தாராம். இந்த சிவன் சன்னதியில் 15 நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்திருந்தாராம். அதை இங்கே இருக்கும் மக்கள் சொல்லி மகிழ்கின்றனர்.  

கழுதைத் தேஞ்சுக் கட்டெறும்பு ஆனக் கதைப் போல இந்தத் திருக்கோவில் தெப்பகுளம் இப்பொழுது ஆக்கிரமிப்புகளால் சுருங்கி இந்த நிலையில் இருக்கிறது.  இந்தத் தீர்த்தக் குளத்தின் பெயர் நயினாமொழி தீர்த்தம்.


மேலும், இந்த திருக்கோவிலின் பெருமைகளை அறிந்துக் கொள்ள ஊர் பெரியவரான அழகப்பன் என்பவரையும் (98946 84301,04852 - 275899) கோவில் பூசாரி சந்திர சேகர் (98949 32161)என்பவரையும் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை பெற்று கொள்ளலாம்.

மீண்டும் அடுத்தவாரம் புண்ணியம் தேடி போறப் பயணத்தில் வேறு ஒரு கோவிலில் இருந்து சந்திக்கலாம்.

12 comments:

  1. எங்களுக்கும் புண்ணியம் கிடைத்துவிட்டது... இந்த பதிவால்....

    ReplyDelete
  2. நயினாமொழி தீர்த்தம் பராமரிப்பே இல்லை போல... இதுவரை சென்றதில்லை... சிறப்பான தகவல்களுக்கு நன்றி சகோதரி...

    ReplyDelete
  3. புண்ணியம் தேடி ... ... நல்ல பயணம். நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது கரும்பு அதிகம் விளைந்த ஊர் என்பதால், கரும்புக் கோட்டை என்று அழைக்கப்பட்டு நாளடைவில் கருப்புக் கோட்டை ஆகி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது (கரும்பு > கருப்பு) அந்த கோயிலுக்கு செல்பவர்களுக்கு பயன்படும் வண்ணம், அழகிய வண்ணப் படங்கள் மற்றும் அவற்றிற்கான விளக்கம் யாவும் அருமை!




    ReplyDelete
  4. சிறப்பானதோர் கோவில் பற்றிய பகிர்வு......

    ReplyDelete
  5. படங்கள் அருமை உங்கள் மூலம் வாரவாரம் நாங்களும் பார்க்காத சில கோவில்களின் தரிசனத்தை பெறுகிறோம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-5.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  7. அருமையான படங்களும் பதிவும் நேரில் பார்த்த உணர்வு தருகிறதே ......

    ReplyDelete
  8. +1
    எப்படி உன்களுக்கு இங்கே எல்லாம் போக நேரமிருக்கு! எழுதுங்கள்; பின்னாளில் கோவில்கள் என்று ஒரு புத்தகம் போடுங்கள்! நான் வாங்குவேன்!

    ReplyDelete
  9. அற்புதமான சூழலில் அமைந்த அமைதி நிறைந்த கோயில் பற்றிய
    விளக்கமும், படங்களும், வரலாறும் மிக அருமை சகோதரி..

    ReplyDelete
  10. வழக்கம் போல சுவையான தகவல்களுடன் அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. புதியதொரு கோவிலை சுற்றிக் காட்டியதற்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  12. அருமையான பதிவுகள். நேரில் பார்த்த உணர்வு தொற்றிக்கொண்டது!

    ReplyDelete