Monday, October 11, 2010

கடற்கரையில் தூயா

மே ௨000. சென்னையில் ஒரு திருமண நிகழ்ச்சி, பெற்றோர், உற்றார், உறவினர் உட்பட ஒரு பேருந்தில் பயணமானோம். காலையும், மாலையும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம் . மதியம் மறுவீடு இருந்ததால், மண்டபத்திலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை. காலை எட்டு மணிதான் ஆகி இருந்தது. நிகழ்ச்சியோ பிற்பகல் இரண்டு மணி அளவில்.

நண்டு, சிண்டு, நட்டுவாக்களி எல்லாம், இங்கேயே இருந்தால் போரடிக்கும். அதனால், நாம் எங்காவது சுற்றிவிட்டு வரலாம் என்று சொல்லவே. ஒரு குரூப்பா கிளம்பிட்டோம்.

அடுத்து டிஸ்கசன் ஆரம்பம். எங்கே போவது என்று ,
பசங்க: குயின்ஸ்லேண்ட் போகலாம். பெருசுக: இருக்கும் டைம் பத்தாது.
பெருசுக: அஷ்டலட்சுமி கோயில் போகலாம், பசங்க:எங்களுக்கு ஒன்னும் வயசாகலை.
குட்டிஸ்: ஜூ போகலாம். அம்மாக்கள்: அதான் வீட்டுலே இருக்கே
அப்படி, இப்படின்னு பீச் செல்வது என்று முடிவு செஞ்சு பீச்சுக்கு போய் சேரும்போது மணி பத்து.

சிலர் அண்ணா சமாதி, சிலர் எம்.ஜி .ஆர் சமாதி, மீதி சிலரோ பீச்சுக்கு ...,
நான் என் இரு மகள்களும் பீச்சுக்கு செல்லும் குரூப்பில்., நான் தூயா பாப்பாவை ஒரு கையிலும், இளையவள் ஓவியாவை ஒருக் கையிலும் பிடித்துக் கொண்டு அலையில் கால் நனைத்துக் கொண்டு இருந்தேன். தூயாவின் சித்தப்பாக்கள் இருவரும் குதிரை சவாரி சென்று கொண்டிருந்தனர்.

தூயா பாப்பாவுக்கு போர் அடித்திருக்கும் போல. நான் சித்தப்பாக் கூட குதிரை ஏறப் போறேன் என்றால். நான் அதெல்லாம் வேண்டாம். எனக்கு பயமா இருக்கு என்று சொல்ல. அதுக்கு அவள் நான் உன்னை போக சொல்லலை நான் தான் போகபோறேன் னு சொன்னேன். ( இந்த காலத்து பிள்ளைங்களே இப்படிதான். நாங்கல்லாம் அந்த காலத்துல... ஏய் அப்பு நில்லு அதென்ன கெட்ட பழக்கம் பாதில எந்திரிச்சு ஓடுறது)

அவள் சித்தப்பாவும், பாப்பாவை விடுங்க நான் பத்திரமா பார்த்துக்குறேன் னு சொன்னதை நம்பி, அவளை குதிரையில் ஏற்றி விட்டுட்டு, இளையவளை மடியில் வைத்துக் கொண்டு அலையை ரசித்துக் கொண்டு இருந்தேன்.(புள்ளைமேல பாசம் இருந்தால் கவனிச்சு இருப்பே. உனக்கு அலைதானே முக்கியம்-தூயா )

சிறிது நேரம் கழித்து, சித்தப்பா வந்து பாப்பா இங்க வந்தாளா னு கேட்க உன்னுடன் தானே அனுப்பினேன் என பதிலுக்கு கேட்க , இல்லை நான் சவாரி முடிச்சு காசு குடுத்துட்டு வரதுக்குள்ள பாப்பாவை காணோம் னு சொல்ல நான் அழ ஆரம்பிக்க..., ஆளாளுக்கு ஒரு பக்கம் தேட ஆரம்பிக்க...

கொஞ்ச நேரம் தேடி ஓய்ந்து, தூயா கிடைக்காமல் போகவே, சரி வாங்க போய் போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்கலாமின்னு உறவினர்களெல்லாம் கூப்பிட..,அதெல்லாம் வேண்டாம். நான் பாப்பா இல்லாமல் வீட்டுக்கு வரமாட்டேன் னு அழுக...,(உன்னை பத்தி தெரியாதா? போலிஸ் கம்ப்ளைன் குடுத்து, அவங்க தேடி குடுத்துடுவாங்க னு உனக்கு பயம்தானே-இளையவள்)

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு பக்கத்திலிருந்த ஒருவர், என்ன தேடுறீங்க? எங்க பாப்பாவை காணோம் னு என் மாமா பதில் சொல்ல, என்ன டிரெஸ், என்ன வயசு, அது இது னு கேள்வி கேட்குறார். அப்புறம் நேத்து கூட பதிமூணு பசங்க காணாம போய் இன்னும் கேடைக்கலைன்னு ஏழரைய கூட்டுறார். உள்ளுக்குள்ள புளிய கரைச்சு எனக்கு கடுப்பாகி நீங்க உங்க வேலைய பாருங்க என்னை பயமுறுத்தாதீங்க னு கெஞ்சுறேன்.

அவர் என்ன நினைத்தாரோ, எங்ககிட்ட ஒரு குழந்தை கிடைச்சுருக்கு, அது உங்களிதானு வந்து பாருங்கன்னு கூப்பிட்டார். அவரி கையெடுத்துக் கும்பிட்டுகிட்டே அவர் பின்னாடியே சென்றால்...,

அங்க ஒரு மீன் கடை எதிர்க்க மேடம், பாவாடைய கழட்டி கையில வச்சுகிட்டு (தண்ணியில பாவாடை நனையக் கூடாதாம்.- எவ்வளவு அக்கறையான குழந்தைய நீ அடிக்கடி திட்டுரம்மா-தூயா ) அப்பா, அம்மா பேரு அட்ரெஸ், யார் கல்யாணத்துக்கு வந்தோம், போன் நம்பர். னு அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கா.

அப்புறம் மீன்காரம்ம்மா வச்ச வெரிபிகேசன் டெஸ்ட்ல பாஸ் பண்ணி, எங்க அப்பா, அம்மாதான் னு தூயா சொல்லி ( எங்க அப்பா அம்மா இல்லை னு சொல்லி இருந்தால் உனக்கு வேற நல்ல அப்பா அம்மா கிடைச்சு இருப்பாங்கல்ல, வட போச்சே- எனது மகன்) குயந்தையெல்லாம் பத்துரமா பார்த்துக்கிடனும்மா .இம்மாம் அழகும் அறிவுள்ள குயந்த கிடைக்குமா(note this point, note this பாயிண்ட்-தூயா. அதை நாங்க சொல்லணும் -இது இளைய மகள்) னு இலவசமா குடுத்த அறிவுரைய பயில வாங்கி வச்சுகிட்டு சந்தோசமா திரும்ப வரும்போது மயங்கிவிழுந்துட்டேன் (சனியன் கிடைச்கிட்டுதேன்னுதான மயங்கி விழுந்தே-இளைய மகள்)

அன்றிலிருந்து இன்று வரை, வெளியில் எங்காவது செல்லும்போது விரல்பிடித்துதான் செல்வேன்.










1 comment:

  1. அதென்ன "சிகாகோவில் சங்கர்லால்" என்பது போல?

    ReplyDelete