திங்கள், அக்டோபர் 23, 2017

வள்ளி...., வள்ளி என வந்தான் வடிவேலன்தான்....

குன்றிருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான். முருகன் இருக்கும் இடமெல்லாம் ஆன்மீக வியாபாரம் இருக்கும். கோவில் சிறுசோ பெருசோ ஆன்மீகம் சம்பந்தமான வியாபாரம் களை கட்டும். கூடவே, கசகசன்னு கூட்டமும் இருக்கும். ஆனா, வள்ளிமலை முருகன் கோவில் மட்டும் கூட்டம் அதிகமின்றி,  வியாபார சலசலப்பில்லாமல் கோவிலும், மலைப்பாதையும் வெகு அமைதியும், சுத்தமுமாய் உள்ளது.  இதற்கு காரணம், இம்மலை முருகனின் பராக்கிரமத்தையோ அல்லது திருவிளையாடலையோ உணர்த்தாமல் முருகனின் காதலை உணர்த்துவதால்  இந்த இடம் அமைதியாகவும், அழகாகவும் இருக்கு.  காதல் இருக்கும்வரை எல்லாமே அழகாதான் தெரியும்போல!

எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான் வள்ளி, முருகன் காதல் கதை.  இருந்தாலும், தல வரலாறு சொல்றது மரபு. அதனால, நாம முதல்ல  அதை பார்ப்போம்.  ஒருமுறை  சிவனின் ஆனந்த தாண்டவத்தை கண்ட விஷ்ணுவின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தோடியது. திருமகளின் ஆசியோடு கண்ணீரின் இரண்டு துளிகள் இரு பெண் பிள்ளைகளாய் மாறியது. விஷ்ணு, மகாலட்சுமிக்கு குழந்தைகள் இல்லாததால் இவ்விரு குழந்தைகளையும் தங்கள் பெண்பிள்ளைகளாய் நினைத்து அமுதவல்லி, சுந்தரவல்லி என பெயரிட்டு வளர்த்து வந்தனர். 

தந்தை விஷ்ணுவின் ஆலோசனைப்படி முருகனை மணாளனாய் அடைய வேண்டி, முருகனை நினைத்து தவம் செய்தனர். அவர்களின் தவத்துக்கு இரங்கிய முருகன், அவ்விருவரையும் அழைத்து அமுதவல்லியை தேவலோகத்திலும், சுந்தரவல்லியை பூலோகத்திலும் பிறக்க கட்டளையிட்டார். முருகனின் அவதார நோக்கமான அசுர வதம் முடிந்ததும், தெய்வானையை மணந்தார். பின், சுந்தரவல்லிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற, போரினால் ஏற்பட்ட அசதிக்கு ஓய்வெடுக்க திருத்தணிகை செல்வதாய் பொய்யுரைத்து தனித்து பயணமானார். 

வடுக நாட்டு எல்லையில் குறவர் குலத்தலைவன் நம்பிராஜனுக்கு பிறந்த அனைத்துமே ஆண் குழந்தைகள்தான். பெண்குழந்தைமீது பெரும் ஆவல் கொண்டு முருகப்பெருமானை வேண்டி நின்றான்.  நம்பிராஜனின் எல்லையில் உள்ள மலைச்சாரல் குகையில்தான் முருகனின் ஆணைப்படி மன்ணுலகம் வந்த சுந்தரவல்லி தவம் செய்து கொண்டிருந்தாள்.  அவளுக்கு காவலாக விஷ்ணுவும் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். நம்பிராஜனின் ஆசைப்படி சுந்தரவல்லி திருமாலின் கண்வழியே பாய்ந்து, அங்கு மான் உருவில் திரிந்த திருமகள் வயிற்றை கருவாய் அடைந்தாள். கருவுற்ற பெண்மான்  அழகிய பெண்குழந்தையை ஈன்றெடுத்தது. பிறந்த குழந்தை மனித வடிவில் இருப்பதை கண்டு  வள்ளிக்கிழங்கை அகழ்ந்தெடுத்த குழியில் விட்டுவிட்டு அவ்விடம் விட்டு அகன்றது.  அங்கு வந்த நம்பிராஜன் அக்குழந்தைக்கு வள்ளி எனப்பெயரிட்டு கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தான்.


வள்ளி திருமணம் பருவம் அடைந்ததும், அவர்கள் குலவழக்கப்படி தினைப்புனம் காக்க தோழியரோடு சென்று, அங்கேயே பரண் அமைத்து தங்கி பறவைகளை விரட்டி பயிர்களை காப்பதோடு முருகனை நினைத்து தவமும் செய்து வந்தாள். இந்நிலையில் அங்கு வந்த முருகன்,  வேடனாக, வேங்கை மரமாக, விருத்தனாக வேடமிட்டு வள்ளிக்கு ரூட்டு விட்டார். எதுக்கும் மசியாதவளாய் முருகனை நினைவாகவே இருந்தாள்.


யார் துணையுமின்றி காதல் நிறைவேறாது என்பது காதலின் விதி. அதன்படி, முருகன் அண்ணனிடம் உதவி கேட்டார்.  தனக்குதான் கல்யாணம் ஆகலியே! தனக்கும் சேர்த்து ரெண்டா கட்டி தம்பி சந்தோசமா இருக்கட்டும்ன்னு நினைச்ச அண்ணன் இதுக்கு ஓகே சொல்ல... முருகன் வயோதிகர் வேடம் கொண்டு வள்ளியிடம் காதல் வார்த்தை பேசினார்.
அதை சகியாத வள்ளி ஓட, கிழவன் துரத்த.. வள்ளியின் எதிரில் வந்த யானையை கண்டு பயந்து முருகனை கட்டிக்க....  ஐயோ! பத்திக்கிச்சு.. பத்திக்கிச்சு... காடில்லப்பா. லவ்வு. அப்புறமென்ன?! டும்.. டும்.. டும்...தான். கல்யாணம் நடந்திச்சு. இதான் இந்த தலத்தோட ஹிஸ்ட்ரி, ஜியாகரபி, பிசிக்ஸ், கெமிஸ்ட்ரிலாம்....


செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வ‌ள்‌ளிமலை‌க்கு‌ வர அதிகபட்சம் மூன்று ம‌ணி நேர‌ம் ஆகு‌ம். அதில்லாம,  செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வேலூ‌ர் அ‌ல்லது ஆர‌ணி, ஆ‌ற்காடு செ‌ல்லு‌ம் பேரு‌ந்துக‌ள் பல வ‌ள்‌ளிமலை‌யி‌ல் ‌நி‌ன்று செ‌ல்லு‌ம். அதில்லாம திருவலம், ராணிப்பேட்டை, காங்கேயநல்லூர், வேலூரிலிருந்தும் தனிப்பேருந்து உண்டு. ஆனா, அதுலாம் குறிப்ப்ட்ட நேரத்துக்குதான்.   இதான் மலைக்கோவிலுக்கு செல்லும் முகப்பு வாயில். இந்த திருக்குளத்திற்கு சரவணபொய்கை என்று பெயர். இங்கிருந்து பாதை இரண்டாக பிரியும். ஒன்று முருகன் கோவிலுக்கும், மற்றொன்று இங்கு வாழ்ந்த சச்சிதானந்த சுவாமிகள் சமாதி, வள்ளிச்சுனை, முருகன் உருமாறிய வேங்கை மரம், வள்ளி குளித்த தடாகம், பொங்கி அம்மன் ஆலயம் செல்லும் வழி என பிரிகிறது.
வள்ளி அம்மனுக்கென தனி ஆலயம்....  திருமணத்தடை அகல அம்மனை வேண்டிக்கும் வழக்கம் இங்குள்ளது.
மூச்சு வாங்க வைக்கும் படிகள். தங்கி ஓய்வெடுத்து செல்ல ஆங்காங்கு மண்டபங்கள் இருக்கு. இதில் ஒரு எட்டுக்கால் மண்டபம் உள்ளது. அது மிக சிறப்பு வாய்ந்தது. எல்லா மண்டபங்களையும் செப்பனிடும்போது இந்த எட்டுக்கால்மண்டபத்தை செப்பனிட அங்கிருக்கும் கல்லை பெயர்த்தபோது அங்கிருந்து வாசனை மிகுந்த புகை வர அப்படியே விட்டுவிட்டார்களாம்.  அதன்பின், சாமியாடி ஒருவர் அங்கு சித்தர்கள் வாசம் செய்வதாக சொல்ல அந்த கல்லை மட்டும் அப்படியே பழமை மாறாமல் இருக்கு. இங்கிருக்கும் சித்தர் பேர் விபூதி சித்தர்.

நூற்றுக்கும் அதிகமான ஏறிய பின் வரவேற்பது முருகனின் வாகனமான மயில்.... அழகிய சுத்தமான பிரகாரத்தைக்கொண்ட கற்கோவில்...


கோவிலின் உள் குகை... நன்றி மறப்பது நன்றன்று என்ற கூற்றுக்கு ஏற்ப காதலுக்கு ஹெல்ப் செஞ்ச வினாயகருக்கு ஒரு சன்னிதி. இந்த குகைக்கோவில் ஒரே கல்லினை குடைந்து உருவாக்கப்பட்டது. காலத்தின் மாற்றம் கோவிலில் தெரிகின்றது. எக்சாஸ்ட் ஃபேன், ஏசி என முருகன்   செமயா வாழ்றார்யா.

அங்கு சுவற்றில் வள்ளி அம்மன் சிற்பம் உண்டு. அதற்கு உடை அலங்காரம் செய்து இருக்காங்க.  கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் அருள்பாலிக்கிறார். எந்த முருகன் கோவிலிலும் இல்லாத அதிசயமாய் இங்கு சடாமுடி வைத்து தீர்த்தம் தருகின்றனர். இக்கோவில் இந்திய தொல்துறை வசம் உள்ளது.

இங்கிருந்து சுமார் 2 கிமீ தூரத்தில் சலஸ்ரீ திருப்புகழ் சுவாமி ஆசிரம்,  வள்ளி சுனை, வேங்கிமரம் இருக்கு.. அதுக்கு சரியான பாதை வசதி கிடையாது. கற்களும், பாறைகளும், மரங்களும் அடர்ந்து காணப்படுது. பெண்கள் துணையின்றி இப்பாதையில் பயணிப்பதை தவிர்க்கலாம்.  பாறைகள் ஒவ்வொன்றும் யானை வடிவம் கொண்டு மிரட்டுது.

இதுதான் சலஸ்ரீ திருப்புகழ் சுவாமிகள் ஆலயம். மிக சுத்தமாக பராமரிக்கப்படுது. முன்கூட்டியே சொன்னால், சாப்பாடு செஞ்சு கொடுக்குறாங்க.


சுவாமிகள் ஓய்வெடுத்த நாற்காலி.. ஒருமுறை இந்த பாதை வழியே சென்றுக்கொண்டிருந்த ஒரு சிறுமி அவரை தடுத்தி நிறுத்தி யாசகம் கேட்டாளாம். என்னிடம் எதுமில்லை பாப்பா என சொன்னதுக்கு.. எதுவுமே இல்லியா?! உன்னிடம் அன்புகூடவா இல்லயென கேட்டு பரிகசித்து சிரிக்க சுவாமிகளுக்கு ஞானம் உண்டாகி இங்கயே தங்கி தவம் புரிந்ததாய் சொல்கிறார்கள். சுவாமிகளின் ஞானக்கண்ணை திறந்தவள் பொங்கி அம்மன்., அவளுக்கும் இங்கு ஒரு ஆலயம் உண்டு.

பொங்கி அம்மன்.. சரஸ்வதி தேவியின் அம்சம்...


வயோதிகனாய் தன் இல்லம் நாடி வந்த முருகனுக்கு தேனும், தினைமாவும் கலந்து உருண்டை பிடித்து கொடுக்க, மாயவன் மருமகனான முருகன் விக்கலெடுத்ததாக நடிக்க, நீரெடுக்க சென்ற வள்ளியை தடுத்து நிறுத்தி சூரியன் காணா சுனைநீர் வேண்டுமென முருகன் கேட்க..அருகிலிருந்த சுனையில் நீரெடுத்து வந்து தந்திருக்கிறாள். இன்றும், இச்சுனையில் சூரியன் கதிர் விழாது. இச்சுனை நீர் அத்தனை குளிர்ச்சி, அத்தனை சுவை...

இந்த மலைப்பாறைக்கு பிந்தான் வள்ளி குளித்த தடாகம்... வள்ளி மஞ்சள் அரைத்த பாறை இங்கதான் இருக்கு. இன்னிக்கும் அந்த பாறையில் வெள்ளைத்துணியை தேய்த்தால் மஞ்சள் நிறமாய் மாறுவதை காணலாம்...  இங்குதான் முருகன் வேங்கை உருமாறி நின்றது, இப்ப அந்த மரம் இல்ல. மலையில் எதும் கிடைக்காது. குளுக்கோஸ், குடிநீர் என எல்லாமே நாமதான் கொண்டு போகனும். நமக்கு லக் இருந்தா நாம கோவிலுக்கு போகும்போது பிரசாதம் கொடுத்தாதான் உண்டு. எனக்கு அந்த லக் கிடைக்கல. உங்களுக்கு கிடைக்குதான்னு பாருங்க.. படங்கள் அனைத்தும் கூகுள்ல சுட்டது.

ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், சஷ்டி என முருகன் சம்பந்தமான அனைத்து விழாக்களும் சிறப்புற நடைப்பெறுது.வள்ளி மணாளனை நினைத்து வணங்குவோம். அனைத்து நலன்களும் பெறுவோம். நாளைக்கு வேற ஒரு முருகன் கோவில் பத்தி பார்ப்போம்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1475592

நன்றியுடன்,
ராஜி.

ஞாயிறு, அக்டோபர் 22, 2017

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்


முருகன் அழகுக்கும், தமிழுக்கும் மட்டும் சொந்தக்காரனில்லை. ஞானத்துக்கும் அவன்தான்  சொந்தக்காரன். ஞானத்தை அள்ளி, அள்ளி தன் பக்தர்களுக்கு அளிப்பதால்தான்  அவனுக்கு சுப்ரமணியர் என பெயருண்டானது.  முருகனை நினைத்து பக்தியோடு வணங்குபவர்களுக்கு ஞானம் கிட்டும் என்பது அடியார்களது நம்பிக்கை. சுப்ரமணியருக்கு தமிழகத்தில் பல கோவில் இருக்கு. திருத்தணியில் அருளும் முருகனும்  சுப்ரமணியர்தான்.  

முருகன் சுப்ரமணியராக அருள்புரியும் தலங்களில் திருத்தணிகைக்கு அடுத்தபடியா புகழ் பெற்றது குன்றக்குடி ஆகும்.  இக்கோவில் சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்திருக்கு.  

போரூரில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் அழகிய குன்றின்மீதிருந்து அருள்புரிகிறான். படிகட்டின் வழியாகவும், முடியாதவர்கள் வாகனங்களில்  செல்ல தனி பாதையென இரு பாதை உள்ளது. பல படங்களில் பாடல்,சண்டைக்காட்சிகள் இங்க படமாக்கி இருக்காங்க. மெட்டி ஒலி நாடகம் இந்த ஊரில்தான் எடுத்தாங்க. 

கீழிருந்து மலைமீதிருக்கும் முருகனை அடைய 80 படிகளில் ஏறி செல்லனும்.  எப்படிடா மலை ஏறப்போறோம்?! பேசாம வண்டிலயே மேல போய் இருக்கலாமோன்னு மலைத்து நிக்குறவங்களுக்கு வழியில் இருக்கும் வலஞ்சுழி வினாயகர் தான் சீக்ரெட் ஆஃப் தி எனர்ஜி. அவர் கொடுக்கும் எனர்ஜியோடு படியேறி போனால், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கொடிமரம் நம்மை வரவேற்கும். கொடிமரத்து முன்பு சாஷ்டாங்கமா வணங்கி முருகனை தரிசிக்க செல்லலாம். கொடிமரத்து முன் விழுந்து வணங்குவதுக்கு காரணம், கொடிமரத்துக்கு முன் பலிபீடம் இருக்கும். அங்கு நமது கோவம், பொய், களவு, காமம் மாதிரியான தீய எண்ணங்களை இறைவன் முன் பலிகொடுத்து தூயவனாகிறேன்ன்னு சொல்லாம சொல்லத்தான்....
கருவறைக்குள் நுழையும் முன்  நம்மை வரவேற்கும் துவாரபாலகர்கள் கையில் வஜ்ரம், சூலாயுதமென முருகனுக்குரிய ஆயுதங்களே உள்ளது. கருவறையில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் காட்சியளிக்கின்றான். இக்கோவிலின் சிறப்பம்சம் என்னவெனில், ஒரே நேரத்தில் தம்பதி சமேதராய் மூவரையும் வணங்குவது மிகக்கடினம். காரணம், அவ்வாறு சிலாரூபாங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.  கருவறைக்கு நேராய் நின்று வணங்கினால் முருகன் மட்டுமே தெரிவார். ஒருபுறம் நின்று வணங்கும்போது வள்ளியுடன் மட்டும் முருகன் தெரிவார். அதற்கு எதிர்புறம் நின்று வணங்கினால் தெய்வானையுடன் மட்டும் முருகன் தெரியும்படி மூலவர் ரூபங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

திருமணத்தடைகளை நீக்குவதில் வல்லவர் இவர். ஒரு கல்யாணத்துக்கு இரு கல்யாணம் முடிச்சவராச்சே! தொழில் நுணுக்கம் தெரியுமில்லையா?! அதனால், நேர்த்திகடனாக, இவருக்கு திருமணம் செய்து வைப்பது, வஸ்திரம் சாத்துவதுன்னு இங்க நடக்குது.  இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, காசி விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், நாகர், நவக்கிரக சன்னிதிகள்ன்னு இருக்கு. மூலவர் சன்னிதி மீதுள்ள விமானம் ‘ஷட்கோண’ அமைப்பில் அதாவது முருகனின் சடாட்சர மந்திர அலைகளுக்கு உகந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. கோவில் அமைந்துள்ள மண்டபத்தின் ஓரத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் நாகலிங்கேஸ்வரர் அருள் தருகிறார்.

திருமணத்தை நடத்தி வைப்பவன் குழந்தை பேற்றை தரமாட்டானா?! அதுக்கும் இங்க வேண்டுதல் வைக்குறாங்க. இங்கிருக்கும் அரச மரத்தில் தொட்டில்கட்டி வேண்டிக்கிட்டா குழந்தை பேறு கிடைக்கும். அவ்வாறு வரம் கிடைக்கப்பட்டங்க குழந்தையின் எடைக்கு எடை சர்க்கரை, வெல்லம், பழம்ன்னு காணிக்கை செலுத்துறாங்க.  குழந்தைக்கு உடல்நலமில்லாம இருந்தா, இங்க வந்து குழந்தையை கோவிலுக்கு தத்து கொடுத்துவிட்டு பின் குழந்தைக்கு ஈடாக தவிடு, வெல்லம் கொடுத்து வாங்கிட்டு போறாங்க. இங்கிருக்கும் வில்வ மரத்தினடியில் வில்வ வினாயகர் இருக்கார்.  அவரை வணங்கினால் படிப்பு வருமாம்! (என்னையும் என் அப்பா, அம்மா கூட்டி போயிருக்கலாம்... ம்ம்ம் இட்ஸ் ட்ட்ட்ட்ட்டூ லேட்ட்ட்ட்ட்). 
பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் பிறந்த ஊர் இதுங்குறதால, அவருக்கு மலை அடிவாரத்தில் ஒரு தனிச்சன்னிதி இருக்கு. அதுமட்டுமில்லாம, ஆண்டு தோறும் நடக்கும் சேக்கிழார் குரு பூஜையின் போது மலையில் இருந்து முருகன் இறங்கி வந்து சேக்கிழாருக்கு காட்சி தருவது ஐதீகமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இக்கோவில் ராஜகோபுரம் மூன்று நிலைகள் கொண்டது.  திருக்கல்யாண மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம்ன்னும் இருக்கு. 


எல்லாம் பார்த்தாச்சு.. கோவில் தலவரலாற்றை என்னன்னு இன்னும் தெரிஞ்சுக்கவே இல்லியே!  தேவர்களை கொடுமைப்படுத்திய தாரகாசுரனை அழிக்க முருகப்பெருமான் படையுடன் வந்தார். திருப்போரூர் திருத்தலத்தில் நடந்த போரில் தாரகாசுரனை முருகன் வதம் செய்தார். அந்த சம்ஹாரம் முடிந்ததும் ரெஸ்ட் எடுக்கவும், வள்ளியை மணம் முடிக்கவும் திருத்தணி நோக்கி புறப்பட்டார். வழியில் குன்றத்தூர் மலையின்மீது சிரம பரிகாரம் செஞ்சிக்கிட்டார். 


இங்கு  தங்கி இருந்த முருகன், ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டையும் செய்து பூஜித்தார். அந்த சிவன், மலை அடிவாரத்தில் ‘கந்தழீஸ்வரர்’ என்ற பெயரில் தனி கோவில் கொண்டு அருள்புரிந்து வருகிறார். கந்தனால் உருவாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டதால் அவருக்கு இந்த பெயர் வந்தது. அதன் பிறகு இத்தலத்தில் இருந்து புறப்பட்டு திருத்தணியை அடைந்ததாக தலவரலாறு சொல்லுது... ங்கு, கிருத்திகை, திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, மற்றும் சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் சிறப்புற நிகழ்த்தப்படுது..

நாளைக்கு வேற ஒரு முருகன் கோவில் பத்தி பார்க்கலாம்.. 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1475498
நன்றியுடன்,
ராஜி.

சனி, அக்டோபர் 21, 2017

முப்பேற்றை அளிக்கும் முருகன் வழிபாடு - கந்த சஷ்டி


உடலை வருத்தி செய்யும் தவத்தால் ஒரு பயனும் இல்லை. மனதார கடவுளை நினைத்து வழிபட்டு, இயன்றளவுக்கு தானங்கள் செய்தாலே இறைவனை அடையலாம். ஆனாலும், உடல் நலத்துக்காகவும், மனதை ஒருமுகப்படுத்தவும் விரதங்கள் அனுஷ்டிக்கப்படுது. தீமிதி, ஒருபொழுது இரு, அலகு குத்துன்னு எந்த தெய்வமும் சொல்லல. ஒருபொழுது இருப்பதுலாம் உடலை சுத்தம் செய்ய... மத்த நேர்த்திகடன்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டதே அன்றி இறைவன் வகுத்ததல்ல.  இறைவன் சொல்வதெல்லாம் தூய மனதுடன், அடுத்த உயிர்களை மதித்தலும், காதலும்தான்... மத்தபடி நாம் செய்யும் அனைத்து விழாக்களும், விரதங்களும், நேர்த்திகடன்களும் நமது திருப்திக்கே!

முருகப் பெருமானின் அருளை பெற   முத்தான மூன்று விரதங்கள்ன்னு விரத நூல்களிலே சொல்லப்பட்டிருக்கு.  திங்கள் அல்லது வெள்ளி என வாரம் ஒருநாள்,  சஷ்டி திதி என மாதம் ஒருநாள், அதில்லாம வருடத்திற்கொருமுறை கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரம் என மொத்தம் மூன்று விரதங்களை அந்நூலில் சொல்லி இருக்கு.  இந்த மூன்று விரதங்களை பத்தி சுருக்கமா பார்ப்போம்...

 எல்லா  உயிர்களுக்கு வேண்டுவது மூன்று சுகம். இகம், பரம், வீடுபேறு இந்த மூன்று இடங்களிலும் காத்தருளும் தெய்வம் முருகன் அதனால் அப்பெருமான் மூன்று உகரங்களுடன் கூடிய முருகு என்ற சொல்லை உடைய தனிப்பெருந் தெய்வமாக விளங்குகின்றான். இந்த மூன்று நலன்களை வழங்க வல்ல தெய்வம் முருகவேல்.  இக நலனை வள்ளிதேவியைக் கொண்டும். பரநலனை தெய்வயானைய்யை கொண்டும், முக்தி நலனை வேலாயுதத்தைக் கொண்டும் நமக்கு அருள் புரிகின்றான். எனவே முருகப் பெருமானை பயன்கருதாது மெய்யன்புடன் வழிபட்டால் இம்மூன்று பேற்றையும் அடையலாம்.  அழகு உறையும் குன்றுகளிலெல்லாம் அழகன் முருகன் குடியிருப்பதாய் எண்ணி  விழாவெடுத்து வழிபடுகின்றோம்.
சுக்கிர வார விரதம்...
வெள்ளிக்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருக்கலாம். இந்த விரதத்தை ஐப்பசி மாத முதல் வெள்ளிக்கிழமையில் ஆரம்பிக்கனும்.  அன்றைய தினம் உபவாசம் இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். இதும் முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவை உட்கொள்ளலாம்.. இதுமாதிரி மூன்று வருடம் தொடர்ந்து விரதமிருந்தால்  பிறவி பெருங்கடலை கடக்கலாம். 
கார்த்திகை விரதம்.....

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் முதலாக (திருக்கார்த்திகை) மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமானைக் குறித்துக் கைக்கொள்ளப்படும் விரதம் இது. உபவாசம் இருத்தல் நலம். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். அல்லது ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ளலாம்.   மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே விரத நாளாகும். திருக்கார்த்திகைத் தீபம் என்று இத்தினத்தில் தீபங்களை ஏற்றிவைத்து ஜோதிவடிவில் இறைவனை வழிபடுவர். சிவராத்திரி நாளில் பிரமவிஷ்ணுக்களுக்குத் தமது சோதிவடிவை இறைவன் காட்டிய பொழுது அவ்வடிவைத் தமக்கு என்றும் காட்டியருள வேண்டுமென அவர்கள் வேண்டினர். அதற்கு இறைவன் திருக்கார்த்திகை நாளில் மீண்டும் இவ்வரவை காட்டுவோம் என்றார்.அதனை நினைவு கூர்ந்தே கார்த்திகைத் தீபநாள் கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் ஆரம்பித்து ஒவ்வொரு கிருத்திகைக்கும்  விரதம் இருக்கலாம். இவ்வாறு 12 வருடம் கடைப்பிடித்தால் மறுமை இல்லாத முக்திபேறு கிடைக்கும்.

சஷ்டி விரதம்..
தமிழ்கடவுளும், குறிஞ்சி நிலத்து தலைவனுமான முருகனுக்குரிய  மூன்று விரதங்களில் மிக முக்கியமானது ஸ்கந்தஷஷ்டி விரதம். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையையடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி திதி வரையிலான ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதமே  ஸ்கந்தஷ்டி விரதமாகும். சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்லது இவ்விரதம். முக்கியமாக, குழந்தைசெல்வத்தை வழங்குவது.  முருகபக்தர்கள் ஒரு கடுந்தவமாகவே இவ்விரதத்தைக் கருதி ஆறு நாட்களும் முழுப்பட்டினியாக உபவாசதிருத்தல் இருப்பர். முதல் நாள் அமாவாசையன்றே ஒரு நேர உணவுண்டு விரதமாக இருந்து மறுநாளைய உபவாசமிருப்போரும் உண்டு.  

 முன்பெல்லாம் பிரதமையிலன்று அதிகாலை நீராடித் தூய ஆடையணிந்து க முருகன் ஆலயம் சென்று அங்கேயே ஆறு நாட்களும் அன்ன ஆகாரங்கள் எதுவுமின்றி இறைவழிபாடு, முருகநாம்பஜனை, நாமஐபம், புராணபடனம், புராணம் கேட்டல் என்றித்தகைய புனித காரியங்களுடன் அங்கேயே தங்கியிருப்பர். அவசர யுகத்தில் அவரவர் வசதிக்கேற்ப,விரத முறைகளும் தளர்த்தப்பட்டிருக்கு. காலையில் நீராடி, உபவாசமிருந்தோ அல்லது பால் பழம் அருந்தியோ அல்லது ஒரு வேளை உண்டோ விரதமிருந்து மாலையில் முருகனை தரிசித்து அன்றைய விரதத்தை முடிப்பர். 

ஏழாம் நாள் சஷ்டியன்று அதிகாலையில் நீராடி, உபவாசமிருந்து, வீட்டில் படையலிட்டு மாவிளக்கேற்றி, அன்னதானமிட்டு, சூரசம்ஹாரம் நிகழ்வினை கண்டபின் தங்களுடைய விரத்தை முடிப்பர்.  அன்றைய தினம் கண்விழித்து முருகன் நினைவாகவே இருத்தல் வேண்டும். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போல முருகனுக்கு ஸ்கந்த சஷ்டி விழாவாகும். அன்றைய இரவு கந்த புராணம், கந்த சஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசமென பாராயாணம் செய்தல் நலம்
இதுப்போல ஆறு அல்லது 12 வருடம் விரதமிருந்தால் முப்பேறும் கிட்டும்... குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருந்தாலும் நம் நினைவுக்கு வருவது அறுபடை வீடும், மருதமலை(கோவை), வெள்ளி மலை (குமரி), வள்ளி மலை (ஆற்காடு), சென்னிமலை(ஈரோடு), எட்டுக்குடி(நாகப்பட்டினம்) பத்துமலை (மலேசியா), கதிர்காமம்(இலங்கை) மாதிரியான சில கோவில்களே! நாளையிலிருந்து தினம் ஒன்றாக ஒவ்வொரு முருகன் கோவில் பத்தி பார்க்கலாம்....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
நன்றியுடன், 
ராஜி. 

வெள்ளி, அக்டோபர் 20, 2017

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?!


திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. வாழ்க்கையில் நாம் எதற்கு ஓடிக்கொண்டு இருக்கிறோம்?!  எதற்கு சம்பாதிக்கிறோம் என்பதற்கு அர்த்தம் கொடுப்பது குழந்தை செல்வம்தான். முன்ஜென்ம வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, "கந்தசஷ்டி விரதம்". குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.

முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது? கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை அறையில் திருவிளக்கேற்றி கந்தசஷ்டி கவசம், ஸ்கந்தகுராகவசம், கந்தர் அலங்காரம் படிக்கலாம்.தெரியாதவர்கள் முருகன் பெயர் சொல்லி கும்பிடலாம். 

சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். சஷ்டி தேவி என்பவள் பச்சிளங்குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்தத் தேவியைக் குறித்த வரலாறு தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர். சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலே இருந்தது. எனினும், பிரம்மாவின் வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டான்.
திருமணமாகி பல ஆண்டு ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாத காரணத்தால், காச்யபரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம் ஆண்டு பிள்ளையைப் பெற்றாள். ஆனால் குறைப் பிரசவமாக இருந்ததால், குழந்தை உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது. மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்கத் துணிந்தான். அப்போது தெய்வாதீனமாக ஒரு பெண் தோன்றினாள். உயிரற்ற - உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொடவும், குழந்தை அழகிய உருவத்துடன் உயிர்பெற்று அழத் தொடங்கியது.
பிரிய விரதன் மிகவும் நெகிழ்ந்து தேவி! தாங்கள் யார் என்று கேட்டான். நான் சஷ்டி தேவிதேவசேனையின் அம்சம். பிரம்மாவின் மானசீக புத்திரி. நான் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பவள்பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு அவ்விரத்தை அருள்பவள். மாங்கல்ய பலம் இழக்கும் நிலையில் உள்ளவருக்கு அதனை நிலைப்படுத்துபவள். அவ்வாறே வினைப்பயன் எப்படியிருப்பினும்அவரவர் வேண்டுகோளுக்கு இணங்கி கணவன்மார்களுக்கு இல்லற சுகத்தையும் செல்வப்பேற்றையும் அருள்பவள் என்று கூறிஅந்தக் குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டாள். குழந்தைகளுக்கு நலமும் வாழ்வும் அருளும் சஷ்டிதேவிஎப்போதும் குழந்தைகளின் அருகிலேயே இருந்துகொண்டு விளையாட்டு காட்டுவதிலும் திருப்தி கொள்வாள். இவள்அஷ்ட மாத்ரு தேவதைகளில் சிறந்தவள்யோகசித்தி மிக்கவள்
ஸ்கந்த சஷ்டி ஆரம்பம் முதல் இறுதி வரை விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் 4.30 மணியில் இருந்து 6.00 மணிக்குள் நீராட வேண்டும். பகலில் பழம் பால் மட்டுமே உண்ணவேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் எளிய உணவாக காலையில் சிற்றுண்டி அருந்தலாம். முருகருக்குரிய மந்திரங்களை பாடல்களை நாள் முழுவதும் பாராயணம் செய்து வருதல் நலம். ஓம் சரவணபவாய நம என்று ஜபித்து வரலாம். திருப்புகழ்,ஸ்கந்த சஷ்டி கவசம், போன்ற கவசங்களை பாராயணம் செய்யலாம். அருகில் உள்ள முருகர் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி அர்ச்சனை வழிபாடு செய்து வருதல் வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து விட்டு வீட்டில் பூஜையறையில் முருகரை வழிபட வேண்டும். முடிந்தால் கோயிலில் வழிபாடு செய்யலாம்.

இதன் பின்னர் மணிக்கு மேல் பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். இவ்வாறு ஆறுநாட்கள்செய்து ஆறாவது நாளில் சூரசம்ஹாரம் எனும் நிகழ்ச்சி முருகர் கோயிலில் தரிசனம் செய்து விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதத்தை தொடர்ந்து அனுஷ்டித்து வர புத்திர தோஷம் விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும் குழந்தை முருகர் அருளால் பிறக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சஷ்டி விரதம். இதையும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனுஷ்டிக்க குழந்தை பிறக்கும்.

தமிழ்மணத்துல ஓட்டு போட.....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1475283
நன்றியுடன்,
ராஜி.